முழு உடல் பரிசோதனை: யாருக்கு.. எப்போது வேண்டும்?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், ‘உடல்நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, ஏதாவது ஒரு நோயின் அறிகுறிகள் வெளிப்படும்வரை, அது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும்வரை பலரும் உடலைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், சில நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து. ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக நிவாரணம் பெறலாம். உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். அதற்கு முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவும்.

முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்? இதுபற்றி கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர் K.I.ஜோசப் மற்றும் டாக்டர் ஸ்மித்தா அசோக் ஆகியோர் விவரிக்கின்றனர்.

யார் யாரெல்லாம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்?

  • பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளோர்.
  • தங்களுக்கு நோய் இருக்கிறதா? இல்லையா என்பதைக் கண்டறிய விரும்புபவர்கள்.
  • புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள்.
  • சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள்.
  • இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள்.
  • அதிக உடல்பருமனால் அவதிப்படுபவர்கள்.
  • அதிக டென்ஷன் உள்ள வேலைகளைச் செய்பவர்கள்.
  • குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் வந்திருந்தால் அவர்களின் வாரிசுகள் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள்,
  • எந்த நோய் இல்லாவிட்டாலும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கண்டறிய முடியும். முழு உடல் பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தரப்படுகின்றன.

மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் என்னென்ன?

பொதுவாக இரத்தம், சிறுநீர், மலம் தொடர்பான பரிசோதனைகள்; மார்பக எக்ஸ்ரே; காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள்; அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்; இ.சி.ஜி., டி.எம்.டி, எக்கோ கார்டியோகிராம்; பெண்களுக்கு மெமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. நோயாளியின் பழக்கவழக்கங்கள், சந்தேகங்கள், நோய் அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனைகள் விரிவடையும்.

அதில் ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் பரிசோதனைகளும் தேவைப்படலாம். முழு உடல் பரிசோதனை செய்வோருக்கு இதுபோன்ற சில பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்தில் செய்யப்படுகின்றன.

என்னென்ன நோய்களைக் கண்டறியலாம்?

இரத்தமாதிரிப் பரிசோதனையில் இரத்த சோகை, இரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு தெரியவரும். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அளவைக் கண்டறிவதன் மூலம் இதயத்தின் இயங்கும் தன்மையை அறியலாம். மாரடைப்பு அபாயத்தையும் அறியலாம். இ.சி.ஜி., டி.எம்.டி. (ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆன்ஜியோகிராம் மூலம் மாரடைப்பு நோயைக் கண்டுபிடிக்கலாம். இரத்த அழுத்த அளவு பரிசோதனையில் இரத்தக் கொதிப்பு வாய்ப்புகளைக் கண்டறியலாம்.

எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் மற்றும் புராங்கைட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளைக் கண்டறியலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மெமோகிராம் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியலாம்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரல் இயக்கம், கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீஸ் பாதிப்பு, கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியலாம். மேலும் இத்தகைய பரிசோதனைகள் மூலம் பித்தப்பைக் கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரகச் செயல்பாடு, புராஸ்டேட் புற்றுநோய் அபாயம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் தோன்றும் சாதாரணக் கட்டிகள் முதல் புற்றுநோய்க் கட்டிகள் வரை கண்டறியலாம்.

பரிசோதனையில் ஏதேனும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அந்தந்த நோய்களுக்கேற்ப துறை ரீதியான மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு குணம் பெறலாம்.

முழு உடல் பரிசோதனைக்கு எப்படி வர வேண்டும்?

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்துக்கு முன்கூட்டியே போன் செய்து அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் இந்த மையம் இயங்கும். பரிசோதனை நாளின் காலையில் காபி, டீ உட்பட எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் காலை ஏழு மணிக்குள் வர வேண்டும். ஏதேனும் மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அது தொடர்பான மருத்துவ அறிக்கை போன்றவற்றை எடுத்து வர வேண்டும்.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் தனிநபர்கள், கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பிரத்யேக முழு உடல் பரிசோதனை திட்டங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு:

முழு உடல் பரிசோதனை மையம், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, 99, அவினாசி ரோடு, கோயமுத்தூர். போன்: 0422 – 4323800, 73393 33485.