100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 49 லட்சம் மோசடி காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு.

அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா, வயது 40.

இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர்.

இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியுள்ளார். மொத்தம் வழங்கிய 1878 வேலை அட்டைகளில் 319 அட்டை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் பலர் தனியார் நிறுவன ஊழியர்கள்; ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அட்டை பெற்றுள்ளனர்.40 ஆண்டுக்கு முன் இறந்தவர் பெயரிலும் அட்டை தரப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களுக்கு அட்டை வழங்கி அரசு பணம் நூதனமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி மூலம் அரசுக்கு பணம் 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் பற்றி தெரிய வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் மோசடி நடந்திருப்பதும் அதன் மூலம் ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவினர் பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.