தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53-வது நிறுவன நாள் விழா!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவனநாள் விழா வியாழக்கிழமை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி  தனது விழா முன்னுரையில் பல்கலைக்கழகம் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தார். பல்கலைக்கழகத்தின் புதிய பயிர் ரகங்கள், பல்கலைக்கழகம் இதுவரை பெற்ற காப்புரிமைகள் குறித்தும் மத்திய மாநில அரசுகளின் முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் குறித்தும் பெருமிதம் கொண்டார். மேலும் பல்கலைக்கழகத்திற்கென ஆரம்பிக்கப்பட்டடுள்ள கார்பஸ் நிதிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஆதரவு குறித்தும் தனது மகிழ்ச்சியை பதிவு செய்தார். மேலும் பல்கலைக்கழகத்தின் தயாரிப்புகள் இணையவழி சந்தைப்படுத்துதலுக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர். கு. இராமசாமி விழா சிறப்புரையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தற்போதைய திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். புதிய கல்விக் கொள்கையில் வேளாண் கல்வியின் நிலைப்பாடு இந்திய வேளாண்மையைப் பொறுத்து அமைவதே சிறப்பானதாக இருக்கும் எனவும் கூறினார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர்.சி. இராமசாமி விழா சிறப்புரையில், வேளாண் பல்கலைக்கழகம் தற்போது முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமியை வெகுவாக பாராட்டினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி வேளாண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அடித்தளமிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வேளாண் வளர்ச்சியே இந்தியப் பொருளாதாரத்தின் முழுமுதல் ஆதாராம் என்பதை பதிவு செய்தார்.

இந்நிகழ்வில், சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர்கள், சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளிலும், பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய 105 பணியாளர்கள், 20 வருடம் பணியாற்றிய 2 ஓட்டுநர்கள் மற்றும் 10 வருடம் பணியாற்றிய ஒரு ஒட்டுநர் என சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.