டாடா மெமோரியல் மையத்திற்கு ரூ.1,200 கோடி பங்களிப்பு வழங்கிய ஐசிஐசிஐ!

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையங்களை நடத்தும் ஒரு புகழ்பெற்ற நிறுவனமான டாடா மெமோரியல் மையத்திற்க்கு ரூ.1,200 கோடி பங்களிப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பை  ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது.

ஐசிஐசிஐ வங்கி, அதன் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து, மகாராஷ்டிராவில் நவி மும்பை, பஞ்சாபில் முல்லன்பூர் ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள டிஎம்சி மையங்களில் மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் மூன்று புதிய கட்டிட தொகுப்பை அமைப்பதற்கும் மற்றும் அதிநவீன இயந்திரங்களுடன் அவற்றை நிறுவுவதற்கும் பணத்தை நன்கொடையாக வழங்குகிறது.

நவீன உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பல்துறைக் குழுக்களுடன், புற்றுநோயியல் சிகிச்சையில் சிறந்து விளங்கும் இந்தப் புதிய மையங்கள், ஆண்டுக்கு 25,000 புதிய நோயாளிகளுக்கு, தற்போதைய திறனை இரட்டிப்பாக்கி, நாட்டின் புற்றுநோய் சிகிச்சை உள்கட்டமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளிக்கின்ற மேம்பட்ட மற்றும் சான்று அடிப்படையிலான சிகிச்சைகளை வழங்கும்.

ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன், இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்த டிஎம்சியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஐசிஐசிஐ ஃபவுண்டேஷனின் தலைவர் சஞ்சய் தத்தா மற்றும் டாடா மெமோரியல் சென்டரின் இயக்குநர் டாக்டர் ஆர்.ஏ.பட்வே ஆகியோர் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கிரிஷ் சந்திர சதுர்வேதி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் சந்தீப் பத்ரா ஆகியோரது முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நவி மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் முல்லன்பூரில் உள்ள டாடா மெமோரியல் சென்டரின் இந்த மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் இந்த உள்கட்டமைப்பு, இப்பகுதி மக்களுக்கு அதிக மானிய விலையில் சரியான நேரத்தில் மற்றும் உயர்தர சிகிச்சையை வழங்கும். மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை வீட்டிற்கு அருகாமையில் வழங்கப்படுவது மிகவும் முக்கியமானது, இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த அதிகமான மக்கள் இத்தகைய சிகிச்சைகளை அணுகுவதன் மூலம் பயனடைவார்கள்.

நவி மும்பை, அக்டர்ஸில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சை பிரிவானது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் கதிரியக்க சிகிச்சையை வழங்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இரத்த புற்றுநோய்கள் மிகவும் குணப்படுத்தக்கூடியவை ஆனால், மிகவும் தீவிரமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. விசாகப்பட்டினம் மற்றும் முல்லன்பூரில் நிறுவப்படும் ஐசிஐசிஐ மையங்கள் குழந்தைகள் மற்றும் இரத்த புற்றுநோய் மையங்கள் ஆகும். மேலும் அதிநவீன பல்துறை பராமரிப்பை வழங்கும். இந்த மையங்கள், அந்த பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செல்லுலார் சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் பிராந்திய மையங்களாக விரைவில் மாறவுள்ளது.