கொசுத்தொல்லை, தாங்கல!

சில நேரங்களில் பெரிய, பெரியகாரியங்களை எளிதாக செய்து விடுவோம். சின்ன விஷயங்களை செய்ய முடியாது. அது மாதிரி ஒரு காரியம்தான்… கட்டுக்கடங்காமல் பெருகிவரும் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் என்று தற்போதைய நிலைமை ஆகிவிட்டது.

மிகப்பெரும்பாலும் நகரமயமாகிவிட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் ஏராளமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. டெங்கு காய்ச்சல் தொடங்கி பல்வேறு நோய்கள் பரவுவதற்கு கொசுக்கள்தான் காரணம் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் கொசுக்களால் மலேரியா காய்ச்சல் பரவியபோது, அன்று மருந்தில்லாத காரணத்தால், பல ஆயிரக்கணக்கான பேர் உலகம் முழுவதும் இறந்தது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. ஆனால் நல்ல மருத்துவ முன்னேற்றம் உள்ள தற்போதைய நிலையிலும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறோம்.

கொசுவும் ஒரு உயிரினம் தானே என்று சிலர் வாதிடலாம். அது பல உயிர்களும் இணைந்து வாழும் வனப்பகுதியில்தான் செல்லுபடி ஆகும். வனத்தில் மான்கள் அதிகமானால் அதைக் கட்டுப்படுத்த அங்கு புலி இருக்கும். அதைப்போலவே நீர் நிலைகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்த அதனை உண்ணும் மீன்வகைகள் இருக்கும்.

ஆனால் இங்கே நகரப் பகுதியில் புதைசாக்கடை எனும் மூடப்பட்ட சாக்கடைக் குழி அல்லது குழாய் போன்ற பகுதிகளில் கோடிக் கணக்கில் கொசுக்கள் வாடகை தராமல் குடியிருக்கின்றன. எவ்விதத் தடையும் இல்லாமல் அவை பல்கிப்பெருகுகின்றன. வாய்ப்பு கிடைத்து, வெளியே வரும் பொழுது கிடைப்பவற்றையெல்லாம் கடித்து குதறுகின்றன.

நகரத்தை ஒட்டிய பெரும் நீர்நிலைகளான ஏரி, குளம் போன்றவை சாக்கடை தொட்டிகளாக மாறி வரும் நிலையில், அவைத் கொசுக்களின் சொந்த நாடாக எளிதில் மாறுகின்றன.

இது போக, நகரநாகரிகத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஓட்டை உடைசல், பழைய கைவிடப்பட்ட பொருட்கள், குறிப்பாக டயர் போன்ற நீர் தேங்கும் வாய்ப்புள்ள பொருட்கள், வீடுகளில் உள்ள பழைய மாடல் கைவிடப்பட்ட ஆட்டுக்கல் போன்றவை கொசுக்களின் உற்பத்தி மையமாக விளங்குகின்றன.

முன்பெல்லாம் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் இந்தக் கொசு ஒழிப்புப் பணியை செய்து வந்தது போல தற்போது பார்க்க முடியவில்லை. அவ்வப்போது ஸ்நேக் பாபு கொசு மருந்து அடிப்பது போலத்தான் கொசு ஒழிப்புப் பணிகளைக் காண முடிகிறது. ஆனால் இதற்கு உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே குறை சொல்லிப் பயன் இல்லை. அவர்கள் கவனிக்க வேண்டிய பணிகள் ஏராளம். பணியாளர்களோ குறைவு. வசதிகளும் குறைவு. இது தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த சூழலில்தான் மக்கள் தாங்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளைப் பொறுப்புடன் செய்தால் இந்த கொசுத் தொல்லைக்கு ஓரளவு முடிவு கட்ட முடியும். தங்களது வீடுகளில் உள்ள ஓட்டை உடைசல்களை நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்காமல் உடனடியாக டிஸ்போஸ் செய்யவேண்டும். சாக்கடை என்பது கழிவுநீர் ஓடுவதற்கு என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் போன்ற குப்பைகளைப் போட்டு, சாக்கடையில் அணை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். காலி மனைகளில் உள்ள குழிகள்,  பாட்டில்கள் போன்றவற்றில் நீர் நிறைந்து கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வேண்டும். கழிவு நீர் மேலாண்மையைச் சிறப்பாக செய்து கழிவுப் பொருட்கள் நீர் நிலை போன்ற இடங்களில் சென்று கலப்பதைத் தடுக்க வேண்டும். பழைய பொருட்கள் வாங்கி இருப்பில் வைத்து தொழில் செய்வோர், தங்கள் திறந்தவெளி குடோனுக்குள் நீர்தேங்கி அதில் கொசு பெருகுவதைத் தடுக்க வேண்டும். முன்பு போல கொசுவுக்கு எதிரியான உயிரினங்களை வளர்த்தெடுத்து உயிரியல் முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அனைவரும் ஒருங்கிணைந்து பணியைச் செய்தால் மட்டுமே இந்த கொசுக்களைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். மாறாக இது சாதாரண கொசு என்று எண்ணிக் கொண்டிருந்தால் கொசுவால் பரவும் நோய்களால் பாதித்து இறக்கின்ற குழந்தைகளின் மரணத்துக்கு நாமும் ஒரு மறைமுகமான காரணமாக ஆவோம்!