“தலை தானுங்க எல்லாம்.. அடிபட்டால் என்ன செய்யனும் தெரிஞ்சுக்கோங்க..”

விளக்குகிறார்  கே.ஜி மருத்துவமனையின்  தலைவர்  பக்தவத்சலம்..!

மனிதனின் சிந்திக்கும் திறனே இன்றையக் கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் காரணம். இவ்வுலகில் கோடிக்கணக்கான உயிர்கள் இருந்தும் இந்த சிந்தனைக்கு சொந்தக்காரர்களான மனித இனமே இன்று தனித்து நடைபோட்டு சரித்திரங்கள் படைத்து வருகின்றது. மாற்றங்களை உருவாக்கும் ஆற்றல்களைக் கொடுக்கிறது நம் மூளை. மூளையைப்பாது காத்துக் கொள்ள தலை என்ற கவசத்தை வழங்கி நம்மைப் படைத்திருக்கிறது இந்த இயற்கை. விலை மதிப்பற்ற உயிரை இயக்கும் கருவியை நாம் நமது கருத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் தானே?

இந்நிலையில் தலையில் அடிபட்டால் ஏற்படும் பிரச்னைகள், மூளைச்சாவு அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன? அடிபடும் போது நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என்ன? மூளைச்சாவு என்றால் என்ன என்பது குறித்து கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.பக்தவத்சலத்திடம் கேள்வி யெழுப்பினோம்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:

கை, கால்களில்  அடிபட்டால் முதலுதவி செய்ய முடியும். ஆனால், தலையில் அடிபட்டால் நிலைமை வேறு. முதலில் தலையில் அடிபட்டவர்கள் மூச்சுவிடுகிறார்களா? என்பதைக் கவனிக்கவேண்டும். நாடித்துடிப்பு இருக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும்.  நினைவு இல்லை யென்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ்சில் முதலுதவி வசதிகள்இருக்கும். அடிபட்டவருக்கு வாந்தி போன்ற பின் விளைவுகள் இருந்தால் அதனை சுத்தப்படுத்த வேண்டும், அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறினால் அதனைத்தடுத்துக்  கட்டுப்போட வேண்டும். குறிப்பாக அனைத்துத் துறை மருத்துவர்களும் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

காதுகளில் இரத்தம்

மூளை-முன்பகுதி, பின் பகுதி மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முன்பகுதியில் அடிபடும் போது மூக்கு, கண் பகுதியிலிருந்து இரத்தம் வரலாம். இரு பகுதிகளில் அடிபட்டால் காதிலிருந்து ரத்தம் வரும். பின்பகுதியில் அடிபடும் போது சுயநினைவு இழக்க நேரிடும். கண் , காது, மூக்கு, தொண்டை,  வாய்ப் பகுதிகளில் இரத்தம் வந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுந்த மருத்துவமனை, சிகிச்சையால் உயிர்களைக் காக்க முடியும்.

உச்சி முதல் பாதம் வரை

தலையில் அடிபட்டால், உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் நன்றாக உள்ளனவா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். எலும்புகள் அடிபட்டுள்ளனவா? முதுகெலும்பு அடிபட்டுள்ளதா?  என்பதையும் ஆய்வு செய்யவேண்டும். இந்த விஷயத்தில், அனுபவமிக்க மருத்துவர்களும், மருத்துவமனைகளே நல்ல சிகிச்சையைத் தர முடியும்.

மூளையில் அறுவை சிகிச்சை என்பது சவாலான ஒன்று. ஒவ்வொரு நரம்பும் பாதுகாக்கப் பட வேண்டியவை. அழுத்த மடைந்த நரம்புகள் போன்றவற்றைப் பாதுகாப்பாகக் கவனித்து செய்ய வேண்டும். ஏதேனும் கோடுகள் விழுந்தால், வலிப்பு நோய் வரலாம்.  ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடம் பாதிக்கப்பட்டால் பேச்சு வராமல் போகலாம். அடிபட்டதால் ஏற்படும் விளைவுகள் ஆறுமாதங்கள்  முதல் ஒரு வருடத்திற்குள் தெரிய வரலாம்.

பின் விளைவுகள்

அடிபட்டு மூளையில் ஏதாவது பாதிப்பு இருந்தால் பின்விளைவுகள் வரலாம். அதே போல்,மூளையில் தழும்புகள் ஏற்பட்ட ஒருவருக்கு வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது. அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால் இதனைத் தவிர்த்துவிட முடியும். உயிரைக்காக்கவும், பாதிப்புகளைக் குறைக்கவும் தான் அறுவைசிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. ஆகையால் அறுவை சிகிச்சையால் எவ்விதப் பின் விளைவுகளும் வராது.

மயக்கம்

தலையில் அடிபட்டு வரும் ஒருவருக்கு சுய நினைவு இல்லாமல் இருக்கலாம். பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம். அவருக்கு சிடிஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். அடிபட்ட இடத்தில்  150 மி.லி. வரை இரத்தக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மூளைக்கு மேல் இரத்தக்கட்டி ஏற்பட்டால் மூளைக்கு அழுத்தம் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படலாம். சுய நினைவற்ற நிலைக்கும் செல்ல வாய்ப்புகள் உள்ளன. உயிரிழப்புக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, உடனடியாக சரியான மருத்துவனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். இரத்தம் உறைந்தஇடத்தைத்துல்லியமாகஅறிந்து, அந்த இடத்தில் துளையிட்டு இரத்தக்கட்டியை முழுமையாக அகற்ற வேண்டும்.

தலையில் அடிபட்ட ஒருவருக்கு ஓரிரு நாட்கள் கழித்து இரத்தக்கசிவு ஏற்பட்டால் பேச்சுக்குளறுதல், தள்ளாட்டம், தலைவலி, சுய நினைவு இழக்கும் நிலை ஏற்படலாம்.இந்த பிரச்னைக்கு இரத்தக் கட்டியை உறிஞ்சி எடுத்து விட்டால், உயிரைக் காக்க முடியும்.

மூளைச் சாவு

மூளைச்சாவு குறித்து நாம் கேள்விப் பட்டிருப்போம். மூளைச்சாவு அடைந்த ஒருவரது மூளை மட்டும் இறந்திருக்கும். உடலில் சில செயல்பாடுகள் இருக்கும். ஆனால் நினைவு இருக்காது. கண் பார்வை இருக்காது. இரத்த அழுத்தம் இருக்கும். பிற செயல்பாடுகள் இருக்காது.  மூளைச்சாவு ஏற்பட்டால், அரசு அனுமதியுடன் ஒரு நாள் சிகிச்சையில் வைத்திருந்து அவரது உறுப்புகளைத் தானமாக வழங்கலாம்.

பெற்றோர், நெருங்கிய உறவினர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே உறுப்புதானம் வழங்கமுடியும். தானங்களில் சிறந்த தானம் உறுப்பு தானம் தான். ஒருவர் உயிரிழந்தால் அவரால்  5 முதல் 6  பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். இறந்தவர் உடலைப் புதைத்து விடாதீர்கள்.  மூளைச்சாவு ஏற்பட்டவுடன் உடல் தானத்திற்கு ஒப்புதல் அளியுங்கள். தமிழ்நாட்டில் தான் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் செய்யப்படுகிறது. இது நல்ல முயற்சி.

 

நம்மை காக்கும் 48 திட்டத்தில் – இன்னுயிர் காத்திடுவோம்

டாக்டர் ராஜ்குமார் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்

தலையில் அடிபட்ட ஒருவர் எந்தஅளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்? பாதிக்கப்பட்டவர் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலமாக பயன் பெற முடியுமா என்பது குறித்து கே.ஜி.மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் தண்டு வட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜ்குமார் கூறியதாவது:

தலையில் அடிபடுதல் என்பதில் 5 நிலைகள் உள்ளன. அதாவது,சாதாரணகாயம், விழுந்ததும் எழுந்து விடுதல், நினைவு இழத்தல், இரத்தம் உறைந்துகசிவு, பலமான அடி ஆகியவையாகும். முதல் நான்கு வகைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்க முடியும். உயிர் பிழைக்க வைக்க வாய்ப்புகள் உள்ளன.

லேசான காயம் என்றால் தோல் அளவில் சரி செய்து விடலாம். தலையில் உள்ள எலும்பு உடைந்திருந்தால், அந்த எலும்பை சரியாக வைத்து சிகிச்சை அளிக்க வாய்ப்புகள் உள்ளன. செயற்கை யான எலும்பை வைத்தும் குணப்படுத்தி விடலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

தலையில் ஏற்படும் காயம் எவ்வளவு தூரம் மூளையை பாதித்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட பல்வேறு வகையான கருவிகள்உள்ளன. முன்பு எக்ஸ்ரே மட்டுமே ஒரே வழியாக இருந்தது. தற்போது நவீன முன்னேற்றத்தால் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.,போன்றவை மிகவும் துல்லியமான சிகிச்சை அளிக்க உதவுகின்றன. எப்படியெனில், மூளையின் சரியான நிலையை அறிய சி.டி.ஸ்கேன் உதவுகிறது. மூளையில் இரத்தக் கசிவை அறிய எம்.ஆர்.ஐ.,உதவும்.

தலைகீழாக ஒருவர் விழும்போது, தலையில் மட்டுமின்றி, முதுகுத் தண்டுவடத்திலும் எலும்பு முறிவுகள் ஏற்படும். இதில், உள்ள ஏழு எலும்புகள் மடங்கினால், நரம்புகளும் பாதிக்கப்படும். இரண்டு கை,கால் முடக்கம் ஏற்படலாம்.  மூச்சு விடுவதும் கடினம். இத்தகைய நிலையில் உள்ளவர் 15 நாள் முதல் 30 நாள் வரை மட்டுமே உயிர் வாழ முடியும். சிகிச்சை தலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்கள் வாரம் ஒரு முறையும் பின்னர்  15  நாட்களுக்கு ஒரு முறையும் பரிசோதனைக்கு வர வேண்டும். அதன் பின்னர் மாதம் ஒரு முறை வந்தால் போதுமானது. ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் பிரச்னைகள் இல்லை என்றால் பரிசோதனைக்கு வரத் தேவையிருக்காது. வலிப்புகள், தழும்புகளைப் பொருத்து மறுபரிசோதனைகள் இருக்கும்.

மருத்துவமனைகளில் மேற் கொள்ளப்படும் முக்கியமான சிகிச்சைகளில் தலைக்காய சிகிச்சையும் ஒன்று. தலையில் அடிபட்ட ஒருவருக்கு சிகிச்சை வழங்க அனுபவமிக்க மருத்துவரும், சிகிச்சைக்கான கருவிகளும், அதி நவீன கருவிகளும் கொண்ட மருத்துவமனை அவசியம். இந்த வசதிகள் அனைத்தும் உள்ள மருத்துவமனையாக கே.ஜி.மருத்துவமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெடிக்ளைம், விபத்து காப்பீடு

விபத்தினால் தலையில் அடிபட்டு வருபவர்களுக்கு கே.ஜி மருத்துவமனையில் மெடிக்ளைம் மற்றும் விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் குறைவான கட்டணத்தில் சிகிச்சை தருகிறோம். நம்மை காக்கும் 48 திட்டத்தில் நெடுஞ்சாலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் தருகிறது.

இதிலும் சிகிச்சை தர நாங்கள் தயார். எல்லோரும் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியும் என்பது இயலாது. நம்மைக் காக்கும் 48 மணி நேரம் என்ற திட்டத்திலும் பயன் பெறலாம். எங்களது மருத்துவமனை, வணிக ரீதியான மருத்துவமனை அல்ல. அறக்கட்டளைச் சார்ந்த மருத்துவமனை. இது,மக்களுக்காகவே சேவையாற்றி வருகிறது. இவ்வாறு மருத்துவர் ராஜ்குமார் கூறினார்