உலகின் பசிப்பிணியை நாம் ஏன் இன்னும் போக்கவில்லை?

கேள்வி : சத்குரு, என் அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறேன். என் கேள்வி என்னவென்றால், பல்வேறு உணவு மற்றும் வேளாண் நிறுவனங்களிலும், விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், பசிப்பிணியை நம்மால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்கு ஆன்மீக அறிவியல் தீர்வு தரமுடியுமா? இந்த இடைவெளியைக் கடக்க ஆன்மீகம் உதவுமா?

சத்குரு : பூமியில் பலர் பசியுடனும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுடனும் இருப்பது, போதுமான உணவு இல்லாத காரணத்தால் அல்ல. 760 கோடி மக்களுக்குத் தேவையான உணவை விட அதிகமான உணவு நம்மிடம் இருக்கும் போதும், 81.5 கோடி மக்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். இது விவசாயத்தின் தோல்வியால் அல்ல, மனித இதயத்தின் தோல்வியிது.

நீங்கள் அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள். உங்கள் உணர்ச்சிப் பெருக்கை என்மீது திருப்புவதற்கு பதிலாக – நான் நன்றாகவே இருக்கிறேன் – இந்த உலகம் நோக்கி இதைச்செலுத்தினால், உங்கள் அன்பைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். அன்பு செயலில் வெளிப்பட்டால், இந்த 81.5 கோடி மக்கள் பசியால் வாடமாட்டார்கள். உலகில் உணவுப் பற்றாக்குறையாக இருந்திருந்தால் அதுவேறு விஷயம். ஆனால் தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும் போதும் மக்கள் பசியாறாமல் இருப்பது மனிதகுலத்தின் தோல்வி, விவசாயத்தின் தோல்வியல்ல.

தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளை அவர்களிடம் இரட்டிப்பாக்கச் சொன்னால், இரண்டே வருடங்களில் செய்துவிடுவார்கள். ஆனால் உண்ண உணவின்றி இருக்கும் மக்களிடம் அதை எடுத்துச் செல்வது எப்படி? இதுதான் மிகப்பெரிய கேள்வி, இடையே சந்தைகள் உள்ளன, இதனால் பாதிக்கப்படும் சுயநலவாதிகள் இருக்கின்றனர், இதற்குத் தடையாக சில தேசங்களும் நிற்கக்கூடும்.

ஒரு முறை நான் உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்த போது, அதில் கலந்துகொண்ட தலைவர்கள் நான் பேசியதை பல சொற்பொழிவுகளில் கேட்டனர். பின்பு அவர்கள் என்னிடம் வந்து, “சத்குரு, உலகில் மாற்றம் ஏற்படுத்த நாங்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் இருந்தால், அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான் 25 பேரின் பெயர்களை உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களை 5 நாட்கள் எனக்குக் கொடுங்கள். இரண்டு மூன்று வருடங்களில் பூமியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்”என்றேன்.

அவர்கள், “யார் அந்த 25 பேர்?” என்று கேட்டனர். நான் உலகின் 25 முக்கிய நாடுகளின் தலைவர்கள் பெயரைச் சொன்னேன். “இவர்களை என்னிடம் 5 நாட்களுக்குக் கொடுங்கள். சராசரி மனிதர்களுக்கு 2 – 3 நாட்களில் இதை என்னால் செய்யமுடியும். ஆனால் இவர்கள் அரசியல் வாதிகளாக இருப்பதால் எனக்கு 5 நாட்கள் தேவைப்படுகிறது. 5 நாட்களுக்கு அவர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். 2 – 3 வருடத்தில் உலகம் மாற்றமடைந்த இடமாக இருக்கும்” என்றேன்.

ஒரே கேள்வி

பூமியில் உள்ள 25 நாட்டுத் தலைவர்கள் மனதில் உறுதியேற்றால், அனைவரும் தேவையான அளவு உண்ணும் விதமாக நாம் செய்ய முடியும். அப்போது ஒவ்வொரு குழந்தையும் நிரம்பிய வயிறுடன் உறங்கச் செல்லும். இதைச் செய்ய பல ஆண்டுகள் தேவையில்லை, இரண்டே ஆண்டுகள் போதும். உணவு, தொழில்நுட்பம், போக்குவரத்து என வசதிகள் அனைத்தும் உள்ளன. மனித குலத்தின் சரித்திரத்தில் முன்பு எப்போதும் இவை அனைத்தும் இருந்ததில்லை.

25 வருடங்களுக்கு முன்பு கூட இது சாத்தியமாக இருந்ததில்லை. ஆனால் இன்று முதல்முறையாக நம்மிடம் எல்லாமே இருக்கிறது, மனிதர்களிடத்தில் விருப்பம் மட்டுமே இல்லாதிருக்கிறது. விருப்பமுடையவர்களாய் மாற எவ்வளவு காலம் தேவை? என்னுடைய ஒரே கேள்வி, ஒரு தலை முறையாக நீங்களும் நானும் இதை நிகழ்த்தப் போகிறோமா, இல்லை வீட்டில் அமர்ந்தபடி புலம்பப் போகிறோமா? இது பற்றி குறை சொல்லி அழுதிட மட்டுமே செய்வோமா, அல்லது எழுந்து நின்று நம்மால் இயன்ற விதங்களில் இதனை நிகழச்செய்வோமா?  இதுதான் கேள்வி.