“பிரிக்கால் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை”

– பிரிக்கால் தொழிலாளர் நல சங்கம்

பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஏஐடியூசி மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சின்ன மத்தம்பாளையத்தில் பிரிக்கால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2000 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை போட்டி நிறுவனமான புனேவில் செயல்பட்டு வரும் மிண்டா என்ற நிறுவனம் பங்குதாரர்களிடம் இருந்து வாங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பிரிக்கால் தொழிலாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பணி பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகனிடம் பேசியபோது, அவர் பிரிக்கால் நிறுவனத்தை விற்கும் எண்ணமோ, அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படும் அவசியமோ இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

எனவே பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்க தலைவர் உதயகுமார், பொதுச் செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் ரமேஷ் பாபு, துணை செயலாளர்கள் பால ஸ்டீபன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர்.