பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி: எதற்காக இந்த பயணம்?

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் சந்திக்க உள்ளார். அமைச்சரான பின்னர் முதல்முறையாக, 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்று மாலை டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். டெல்லியில் பணியாற்றும் தமிழகப் பிரிவுஅதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரைச் சந்தித்து, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த கோரிக்கை வைப்பார் என்றும், பிப்ரவரி-19 வன்முறையின் போது காயமடைந்த மாணவர்களை விசாரிக்க உதயநிதி ஜேஎன்யுவுக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்புகளின் போது, தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது உள்ளிட்டவை குறித்து உதயநிதி வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கையும் அமைச்சர் உதயநிதி சந்திக்க உள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பில், உதயநிதி தனது துறைகள் தொடர்பான மாநில அரசின் கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் ஒருமுறை கோரிக்கைகள் வைக்க இருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவுக்கான அழைப்பிதழ்களையும் சில தலைவர்களுக்கு வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.