என்.ஜி.பி கல்லூரியில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த நிகழ்வு

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் கல்விசார் மேம்பாட்டு மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கம்.

நிகழ்வில் சென்னை அரசு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு அரசு வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது: மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் அரசு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், அரசு வேலைவாய்ப்புப் பெறுவதற்கு உண்டான தகுதிகளை இளங்கலை பயிலும் பொழுதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவத்தில் சேர்வது என்பது இளைஞர்களுக்கு எப்போதும் ஒரு கனவாகவும், லட்சியமாகவும் இருக்கிறது. அதற்கு மாணவர்கள் கல்வி பயிலும் பொழுது ராணுவ வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் குறித்தும், ராணுவ தேர்வு முறைகள், தேர்வை எதிர்கொள்ளும் உத்திகள் பற்றியும் எடுத்துரைத்தார்.