ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோய் தின விழிப்புணர்வு

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்) உலக குழந்தைகள் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ம் தேதி உலக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் புற்றுநோய் என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

ஆனால் குழந்தைகளுக்கும் புற்றுநோய் வரலாம். இது 85% சதவீதத்திற்கு மேல் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும். சரியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் பட்சத்தில் அவர்களால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் என அனைத்து தரப்பிலிருந்தும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படும் போது எளிதில் அவர்களால் சகஜமான நிலைக்கு வர இயலும். இந்த புரிதலை ஏற்படுத்துவதற்காகவே உலக குழந்தைகள் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை, இது பரம்பரை நோயும் அல்ல, உணவு பழக்கத்தால் உண்டாவதும் இல்லை, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. எனவே, இது ஒரு விபத்து ஏற்படுவது போலத்தான் நிகழ்கிறது. சரியான மருத்துவ சிகிச்சையினை சரியான நேரத்தில் பெறுதவன் மூலம் அவர்கள் விரைவில் குணமடைந்து மற்ற குழந்தைகளைப்போல் சகஜமான வாழ இயலும்.