ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2003 – 2007 கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அலமேலு மற்றும் முன்னாள் மாணவர் சங்க தலைவர் வீணா மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தனர். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் தலைமை தாங்கி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார்

2003 – 2007 கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த சுமார் நூறு பேர், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்கள் மற்றும் இப்போது கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகியவற்றை சுட்டிகாட்டினர். கல்லூரி மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்குவதற்காகவும், கல்வி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கூடங்களில் பல்வேறு பயிற்சிகள் பெறுவதக்கு உறுதுணையாக ரூபாய் ஐந்து லட்சத்துக்கான காசோலையை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் பலருக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது. விழாவின் ஒருபகுதியாக குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி இசைக்குழு மாணவர்கள் நடத்திய கச்சேரியும் நடைபெற்றது.