சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்த சென்ற மாநகராட்சி அதிகாரிகள்

கோவையில் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூபாய்.10,000/- அபராதம் செலுத்தி மாட்டை பிடித்துச் செல்ல வேண்டும். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும்.

மேலும், பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் கோவை மத்திய மண்டலம் 80 மற்றும் 81 வது வார்டுக்குட்பட்ட உக்கடம், கெம்பட்டி காலனி, செட்டி வீதி ஆகிய பகுதிகளில் சாலைகளிலேயே போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 5 க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் பிடிக்கப்பட்டன.

பிடிபட்ட மாடுகள் வ.உ.சி.,பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் யாரும் மாடுகளை பெற்றுக்கொள்ள வரவில்லையெனில் மாடுகள் கோசாலைக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.