புத்தகத்தால் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி எஸ்.எஸ்.வி.எம் பள்ளி உலக சாதனை

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியின் யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சி எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியில் நடைபெற்றது. புளோரிடாவின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் இந்த முயற்சியை மதிப்பீடு செய்தார். அதைத் தொடர்ந்து, பள்ளி யுவா கிளப் மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நிறுவனர் சிவநேசன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் இணை நிறுவனர் சசிகலா சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த முயற்சி குறித்து சசிகலா சத்தியமூர்த்தி கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை ஒரு சமூகப் பணியை செய்கிறது என்றும், இந்த முயற்சி மாணவர்களிடையே புத்தகங்களை படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும்.

கிறிஸ்துமஸ் மரம் போன்ற கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட 12,000 புத்தகங்களை சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நூலகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.