ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை சரியா? சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் – நீதிபதி ஆறுமுகசாமி

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். அவர் மேடையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றி என்னிடம் பலர் கேட்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால், அம்மாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160, கிரியேடின் 0.82. உடல் பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் என இத்தனை கோளாறு இருந்துள்ளது. இதற்கு சர்ஜரி செய்யலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கிய விஷயம்.

அவரது உடல் பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன்.

இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பதுபோல், ஒரு மருத்துவரை வைத்து, உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம். இங்கு நான் அதிகம் பேசினால் அரசியல் ஆகிவிடும். விசாரணை கமிஷன் அறிக்கை முறைப்படி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.