“திருமண மண்டபங்களை சேவை பிரிவில் இணைக்க வேண்டும்”

கோவையில் நடைபெற்ற, தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து ஐந்து அல்லது எட்டு சதவீதமாக குறைக்க வேண்டும், திருமண மண்டபங்களை சேவை பிரிவில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள சாய் விவாஹா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் சிங்கை முத்து தலைமையில் நடைபெற்ற இதில் நிர்வாகிகள் மனோகரன் பத்ரி, தேவராஜ், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கெம்பராஜ் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழக அரசிற்கு விடுக்கும் கோரிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் திருமண மண்டபங்களை வணிகம் மற்றும் தொழிற்சாலை பிரிவுகளில் இருந்து நீக்கி,சேவை பிரிவில் திருமண மண்டபங்களை இணைக்க வேண்டும், மின்சார கணக்கீடில் பிரிவு மூன்று, ஐந்து என்று இல்லாமல், இரண்டு மாத்த்திற்கு குறைவாகவே பயன்படுத்தும் தனிப்பிரிவை ஏற்படுத்தி நிரந்தர வரியை ஐம்பது அல்லது நூறுக்குள் மாற்ற வேண்டும், தற்போது உயர்த்தியுள்ள சொத்து வரியை இரண்டு வருடத்திற்கு நடைமுறைபடுத்த வேண்டும், ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்திலிருந்து ஐந்து அல்லது எட்டு சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.