அன்னூரில் தொழிற்பூங்கா அமைய எதிர்ப்பு சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அன்னூரில் தொழில் பூங்கா அமைய அனுமதிக்க மாட்டோம் என கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அன்னூர் விவசாயிகள் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பிற்காக அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் முன்பு திரண்டு வந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பின்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து முறையிட்டு தனித்தனியாக மனுக்களை அளிக்க அனைத்து விவசாயிகளும் தயாராக இருந்த நிலையில், திடீரென ஆடிஸ் வீதியிலேயே சாலையை மறித்து அன்னூர் பகுதியில் தொழில் பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு அலுவலர்கள் அம்மனுக்களை பெற்று கொண்டு இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.