பற்களின் ஆரோக்கியம் பல நோய்களைத் தடுக்கும்! – கே.ஜி.பல் மருத்துவர்கள் தகவல் 

நம் முகத்திற்கு பல் கூடுதல் அழகு சேர்க்கும் ஒன்றாக உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் பற்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மேலும், பற்களின் ஆரோக்கியத்திலும், அதன் பராமரிப்பிலும் அக்கறை எடுத்துக் கொள்வோர் வெகு சிலரே. சொத்தைப் பல் இருந்தால் அதனை கண்டுகொள்ளாமலேயே இருப்பதோடு, வலி எடுக்க ஆரம்பித்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்கின்றனர். நமது உடலின் பிற உறுப்புகளுக்கு மருந்து போன்றவற்றால் தன்னை சரி செய்து கொள்ளும் திறன் உள்ளது. ஆனால் பற்களுக்கு சுயமாக தன்னை சரிசெய்து கொள்ளும் திறன் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.ஜி.,யில் பல் பரிசோதனை செய்வதற்கான அதிநவீன கருவிகள் உள்ளன. இங்குள்ள பல் மருத்துவர்கள் பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், பல் துலக்கும் போது ஒருவர் செய்யும் தவறுகள் என பல் நலன் குறித்து பல முக்கிய தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அவற்றை காண்போம்.

பல் வலி தாங்க முடியாதது!

– டாக்டர் பக்தவத்சலம், தலைவர், கே.ஜி மருத்துவமனை

‘பல் போனால் சொல் போகும்’ என பெரியோர் கூறுவார்கள். “எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் பல் வலியை தாங்க முடியாது” என நமக்கு தெரிந்த பலர் கூறி கேட்டிருப்போம். சிலர் முறையாக பல் விலக்க தவறி விடுவதால், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும் உணவு சொத்தை பல் ஏற்பட காரணமாக அமைகிறது.

இப்படி சிக்கும் உணவு, வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் நமது பல்லின் வெளிப்பூச்சான எனாமலை சிதைத்து விடுகிறது. இதனால் பற்கள் சொத்தையாகின்றன. பற்களைச் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய உணவு பொருளை சாப்பிட்ட பின்பு பற்களை சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பல் துலக்கும் முறை எப்படி என்பதை அறிவுறுத்த வேண்டும். பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். உடலின் செரிமானமானது வாய்ப்பகுதியில் இருந்தே முதலில் தொடங்குகிறது. எனவே, உமிழ்நீருடன் உண்ணும் உணவு கலந்து உடலுக்குள் செல்லவேண்டும். மேலும், உணவு வயிற்றுக்குள் செல்லும் முன்பே வாயிலேயே நன்றாக அரைபட்டு கூழாக மாறிடவேண்டும்

அலட்சியமே பல் சொத்தைக்கு காரணம்!

டாக்டர் ஸ்ரீமன் நாராயணன், பல்வேர் சிகிச்சை நிபுணர்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவதே, பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தை ஏற்பட காரணமாக உள்ளது. சரியாக பல் துலக்காதது, குறிப்பிட்ட இடைவேளை விடாமல் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பல் சொத்தை ஏற்படும். உணவு உண்ட பின்பு, வாயில் ஒருவித அமிலம் சுரக்கும். அந்த அமிலம் நடுநிலை அடைவதற்குள் அடுத்த உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது.

சொத்தை பல் ஆரம்பத்தில் வலியை தராது. முதலில் உணவு பல்லில் சிக்கும். இந்த நிலையின் போதே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுக்கும்போது, பல்லை அடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். பல்லில் சிக்கும் உணவை ஊசி, பற்குச்சி கொண்டு சிலர் எடுப்பார்கள். அப்படி செய்தால் சொத்தை பெரிதாகிவிடும். இதுபோன்ற செயலை செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் மக்களின் அலட்சியமே பல் சொத்தைக்கு காரணமாக இருக்கிறது.

ரூட் கனால் சிகிச்சை:

சிறிய அளவிலான சொத்தை இருக்கும் போது சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.  ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அதற்கு அடுத்ததாக பல்ப் (பல் கூழ்) என்று சொல்லக்கூடிய நரம்பு பகுதிக்கு சென்று வலியை ஏற்படுத்தும்.

எனாமல், டென்டைன் வரை சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால் ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்யப்பட வேண்டும். இதில் பல்லில் உள்ள அனைத்து சொத்தைகளையும் முழுமையாக அகற்றி, பாதிக்கப்பட்ட நரம்பையும் நீக்கவேண்டும். பின்பு குழி போன்ற இடத்தை அடைத்துவிட்டு, அந்தப் பல்லுக்கு கேப் போட்டு மூடப்படுகிறது.

செயற்கை பல் பாதுகாப்பானதா?

சிலருக்கு ரூட் கேனால் சிகிச்சை செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய பற்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக செயற்கை பல் பொருத்தவேண்டும். இதனை ‘இம்ப்ளான்ட்’ என்போம்.

இயற்கையாக பல்லுக்கு வேர் இருப்பது போலவே, செயற்கைப் பல்லுக்கு ஸ்குரு போடப்படுகிறது.   இந்தப் பல் கழன்றுவிடுமோ என பயம் கொள்ள தேவையில்லை. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பற்களைக் கட்டமுடியும். மேலும், செயற்கை பல் பாதுகாப்பானதா என்ற அச்சம் சிலருக்கு இருக்கும். ஆனால் அதை எப்படி பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் பாதுகாப்பு அமையும்.

பல் இடுக்குகளில் எப்படி சுத்தம் செய்வது?

பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதியை சுத்தப்படுத்த முடியாது. இங்குதான் உணவுத்துகள் சிக்கி, வாய்நாற்றத்துக்கு வழி அமைக்கிறது. இரண்டு பல்லுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை சுத்தப்படுத்துவதை ஃபிளாஸ்ஸிங் என்கிறோம். நூல் போன்று இருக்கும் இதனை இரு பற்களுக்கு இடையில் செலுத்தி இழுக்க வேண்டும். பல் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் இதை  பயன்படுத்தலாம்.

பல் பரிசோதனை செய்யும் வயது: 

குழந்தைகளை பிறந்த 6 மாதத்தில் இருந்து 1 வயதிற்குள்ளாக அல்லது முதல் பல் தெரிந்த உடன் பல் பரிசோதனை செய்ய மருத்துவரிடம் அவசியம் அழைத்து வரவேண்டும். பின்பு 4 வயதிலும், 7 வயதிலும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதன் மூலம் பற்களின் சீரமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சிறு வயதிலேயே அதற்கான ஆலோசனைகளை வழங்கி சரி செய்துவிடலாம். பெரும்பாலானோரிடம் விழிப்புணர்வு இல்லாததால் குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வருவதில்லை. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்வது மிக அவசியம்.

நீண்ட நேரம் பல் துலக்காதீர்கள்!

டாக்டர் சத்யபிரியா, பல் அறுவை சிகிச்சை நிபுணர்

ஈறு வீக்கம், ரத்தக் கசிவு:

ஈறுகள் வலுவாக இருந்தால்தான் பற்கள் விழாமல் இருக்கும். ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவது வாயின்  ஆரோக்கியம் குறைவாக உள்ளதைக் காட்டுகிறது. பற்களில் உள்ள அழுக்கு, வைட்டமின் சி மிகுந்த உணவை குறைவாக சாப்பிடுவது, நீண்ட நாட்களாக ரத்த அழுத்ததிற்க்கான மாத்திரை சாப்பிடும் போது அதன் பக்க விளைவால் கூட ஈறுகளில் வீக்கம் வரும்.

கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு ஏற்படும். இது ஹார்மோனல் மாறுபாட்டால் உண்டாகிறது. அந்த சமயத்தில் பல் மருத்துவரை அணுகுவது அவசியம். இதற்கு சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சாக்லேட் பற்களை பாதிக்குமா?

பெரும்பாலும் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக சாக்லேட் உள்ளது. ஆனால் சாப்பிட்டு விட்டு வாயை எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்து அதன் பாதிப்பு குறைகிறது. மேலும், சாக்லேட் சாப்பிடும் போது, குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.

உணவுத் துகள்கள் பல்லின் குழிக்குள் நீண்ட நேரம் தங்கிவிட்டால், வாயில் உள்ள பாக்டீரியா அதில் போய் சேர்ந்து ஒரு வித அமிலத்தை வெளியேற்றும். இது பல்லின் (எனாமல்) முதல் வெளிப்புற பூச்சை பாதிக்கிறது. எனவே, சாக்லேட் மற்றும் எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால் பற்கள் பாதிப்படையாது.

சர்க்கரை நோயும், பல் பிரச்சனையும்:

சர்க்கரை நோய்க்கும் பல் தொடர்பான பிரச்சனைக்கும் அதிக தொடர்பு உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால் பல்லை சுற்றியுள்ள எலும்பு பலவீனமாக ஆரம்பிக்கும். அதனால் இவர்கள் ஒரு வருடத்திற்கு இரண்டு முறையாவது பல் மருத்துவரை கண்டு, ஆலோசனை பெறுவது நலம்.

பல் மஞ்சளாக தெரியக் காரணம்?

மரபணு காரணம், சிறுவயதில் சாப்பிட்ட உணவு, சரியான பராமரிப்பின்மையால் பற்களின் நிறம் மாறுகிறது. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்த்தால் எனாமல் தேய்ந்து டென்டைன் பகுதி வெளியே தெரியும் போது மஞ்சளாக தெரியலாம் அல்லது குடிநீரில் ஃபுளூரைடு எனும் தாதுப்பொருள் அதிகமாக இருந்தாலும் நிறம் மாறும்.

பற்களைப் பாதுகாக்க…

சிலர் நீண்டநேரம் பல் துலக்குவார்கள். இது பல் தேய்மானத்திற்கு வழிவகுக்கும். 2 நிமிடம் பல் தேய்த்தால் போதுமானது. அதிலும் மென்மையான பல் துலக்கிகளை உபயோகிப்பதோடு, டூத் பேஸ்ட்டில் ஃபுளுரைடு என்ற உப்பு உள்ளதா என்பதை பார்த்து வாங்கவேண்டும். பல் துலக்கும் போது, மிகவும் அழுத்தி தேய்த்தால் பல்லின் எனாமல் தேய்ந்துவிடும். இதனாலும் குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படுகிறது.

மேல் தாடைப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்த் தாடைப் பற்களைக் கீழிருந்து மேலும் வட்டச் சுழற்சியில், மிதமான அழுத்தம் கொடுத்து, பல்லின் உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் கவனம் செலுத்தி தேய்க்க வேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்திற்கு நார்சத்து மிகுந்த உணவை சாப்பிடுவதுடன், துரித உணவுகளை தவிர்க்கவேண்டும். ஒரு நாளைக்கு காலை, இரவு என இரண்டு முறை அவசியம் பல் துலக்கவேண்டும். இரவு பல் துலக்கிய பிறகு நீர் மட்டுமே குடிக்கவேண்டும். பல்லோடு சேர்ந்து நாக்கையும் பராமரிப்பது முக்கியம்.  அப்போதுதான் துர்நாற்றம் வராது. வருடத்திற்கு இருமுறை பல் மருத்துவரிடம் அவசியம் செல்லவேண்டும்.

பல்துலக்கியின் தலைப்பகுதி சிறிதாக இருந்தால் தான், அது பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். அதில் உள்ள இழைகள் வளைய ஆரம்பித்தால் உடனே அதை மாற்றிவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கியை மாற்றுவது நல்லது.

புகையிலை பொருட்கள், புகைப்பிடிப்பது, சோடா போன்ற குளிர்பானங்களை தவிர்க்கலாம்.   இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பாதிக்கின்றன. மேலும், மவுத் வாஷை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. சில நேரங்களில் வாய் உலர்ந்து இருக்கும் போது துர்நாற்றம் வரும். அதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் நீர் பருகவேண்டும். கல் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கலாம்.