வாழ்க்கையின் நோக்கம் என்ன?

சத்குரு: இந்த தருணத்தில் நீங்கள் மிகவும் ஆனந்தமாகவும், பரவசமாகவும் உணர்ந்தால், “என் வாழ்க்கையின் நோக்கம் என்ன” என்று தோன்றுமா? ஏதோவொரு வகையில், வாழ்க்கை உங்களுக்கு சுமையாகிவிட்டால் மட்டுமே, இந்த கேள்விகள் எழுகின்றன. “உயிர்வாழ வேண்டுமா, வேண்டாமா?” “நான் வாழ்வதற்கு போதுமான நோக்கம் இருக்கிறதா?”

உங்கள் வாழ்க்கையின் அனுபவம் பிரம்மாண்டமாகவும் போதுமானதாகவும் இல்லை. அதனால்தான் நீங்கள் அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். இங்கே உட்கார்ந்து வெறுமனே சுவாசிப்பதே உங்களுக்கு ஆனந்தமாக இருந்தால், வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள். எனவே, நீங்கள் இந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வாழ்க்கையை அதன் அதிகபட்ச ஆற்றலுடன் மேம்படுத்த நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நான் “வாழ்க்கை” என்று கூறும்போது, வாழ்க்கை என்றால் என்னவென்று கூட உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

உங்களிடம் இப்போது இருப்பது உங்கள் உடலும் மனமும் மட்டுமே. அவற்றை உங்களால் முடிந்தவரை இனிமையாக்குங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் இனிமையான நிலையில் இருந்தால் மட்டுமே, உங்களில் உள்ள அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்படும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்போது மட்டுமே உங்கள் அறிவுத்திறன் சிறப்பாக செயல்படும். ஒரு மனிதன் தொடர்ந்து 24 மணிநேரத்திற்கு ஆனந்த நிலையில் இருக்க முடிந்தால், அவரின் புத்திசாலித்தனம் இரட்டிப்பாகும். இதை இன்று நிரூபிக்க போதுமான மருத்துவ சான்றுகள் உள்ளன.

உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள், ஒரு கணம், வெறுப்பு, எரிச்சல், கோபம், பதற்றம், போன்றவை எதுவும் இல்லாமல் கழித்திருக்கிறீர்களா? இத்தனை ஆண்டுகளில், நீங்கள் 24 மணிநேரத்தை ஆனந்தமாக செலவிட்டிருக்கிறீர்களா?

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள், ஒரு கணம், வெறுப்பு, எரிச்சல், கோபம், பதற்றம், போன்றவை எதுவும் இல்லாமல் கழித்திருக்கிறீர்களா? இத்தனை ஆண்டுகளில், நீங்கள் 24 மணிநேரத்தை ஆனந்தமாக செலவிட்டிருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு மனித சமுதாயமும் இந்த கேள்விக்கு “இல்லை” என்றுதான் பதிலளிக்கும். நீங்கள் ஒரு நாள் ஆனந்தமாக இல்லையென்றால், அது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் ஒரு நாள் கூட ஆனந்தமாக இருக்கவில்லை என்றால் உங்களிடம் அடிப்படையே தவறாக உள்ளது என்றுதானே அர்த்தம்.

இந்த மனித வாழ்க்கைமுறை என்றால் என்ன என்பதற்கான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், நீங்கள் அதை இயக்க முயற்சிக்கிறீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு காரில் இயக்கியது போலவே, அந்த மூன்று பெடல்கள் என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியாது, நீங்கள் விரும்பும் போதெல்லாம் அவற்றில் ஏதேனும் ஒன்றை அழுத்தினீர்கள். நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமான ஒரு டிரைவர் என்று உங்களுக்குத் தெரியுமா?

இப்போது, உங்கள் நல்வாழ்வு அந்த அளவிற்கு முட்டாள்தனமாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அன்பு, பேரின்பம் மற்றும் பரவசத்தின் தருணங்களை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை உங்களால் தக்கவைக்க முடியவில்லை. நீங்கள் கையாளும் செயல்முறையின் நுட்பத்தை புரிந்துகொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை இயக்க முயற்சிக்கிறீர்கள் என்பதால் இது மிகவும் சிக்கலாக உள்ளது.

எனவே, இதன் “நோக்கம் என்ன?” என்ற கேள்வி எழுகிறது, ஏனெனில் நீங்கள் இருப்பின் மகத்துவத்தை அனுபவிக்கவில்லை. நீங்கள் இருப்பின் அற்புதமான தன்மையை அனுபவிக்கவில்லை. அதனால்தான், இதன் “நோக்கம் என்ன? இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறீர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் ஒரு கணம் இங்கே உட்கார்ந்து இதை அனுபவிக்க முடிந்தால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியவரும். உயிருடன் இருப்பதே போதுமானது.