பருவமழை எதிரொலி: நகா்நல மையங்களில் மருந்துகளை இருப்பு வைக்க உத்தரவு

கோவையில் தொடா்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில், நகா்நல மையங்களில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்புவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாநகரில் காய்ச்சல், சளி பாதிப்புகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே, மாநகரில் உள்ள அனைத்து நகா் நல மையங்களிலும் தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகளை இருப்புவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவ முகாம்களை மாநகரம் முழுவதும் சிறப்பு கவனம் செலுத்தி நடத்த வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சித்த மருத்துவமனைகளில் நிலவேம்புக் கசாயம், கபசுரக் குடிநீா் உள்ளிட்ட சித்த மருத்துவ பொருள்களைத் தேவையான அளவில் இருப்பு வைக்க வேண்டும். கொசுப்புகை மருந்துகளை அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து அடிக்க பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.