வண்ண விளக்குகள் ஜொலிக்கும் கோவை ரேஸ்கோர்ஸ்

“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டன. வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரியும் துவங்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள தெருவிளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டன. இதனால் கோவை மாநகர் புதுப்பொலிவு பெற்றது.

மாநகரின் ‘ஹாட் ஸ்பாட்’ என்று அழைக்கப்படும் ரேஸ்கோர்ஸ் சாலையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், நிறைந்த பூங்கா, உடற்பயிற்சி கூடம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர தாமஸ்பார்க் பகுதியில் பிரம்மாண்ட மீடியா டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் இந்த டவர் ஜொலிப்பது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. கோவைக்கு இது ஒரு புது அடையாளத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இந்த இடம் இனி செல்ஃபி ஸ்பாட் ஆக இளைஞர்கள் மத்தியில் வரவேற்க்கப்படும். அதேபோல் இந்த டவரை சுற்றி, தார் சாலைக்கு பதிலாக லண்டன் நகரை போல் கற்கள் பதிக்கப்பட்ட சாலைகள் உருவாக்கப்பட்டு வருவது இந்த இடத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.