கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ம் தேதி கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் 2 கியாஸ் சிலிண்டர்கள் கிடந்ததால் இது விபத்தாக இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் கோவில் முன்பு என்பதாலும், கார் தீப்பிடித்ததில் கோவிலின் முன்பகுதி சேதம் அடைந்திருந்ததாலும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் என்பதால் பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் யாராவது சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் இரும்பு குண்டுகள் கிடந்தன. இதனால் சந்தேகம் மேலும் வலுத்தது.

இதற்கிடையே காரில் இறந்து கிடந்தவர் கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 25). என்பதும் பொறியியல் பட்டதாரியான இவர் பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

போலீசார் ஜமேஷா முபினின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

கேமிராவை ஆய்வு செய்தபோது ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பிலிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் 5 பேரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 5 பேரையும் வரும் 8ம் தேதி வரையில் சிறையில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விரைவில் என்.ஐ.ஏ கையில் எடுக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளனர். என்.ஐ.ஏ டி.ஐ.ஜி மற்றும் கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் கோவை வந்துள்ளனர்.

அவர்கள் தனிப்படை அதிகாரிகளிடம் உள்ள விவரங்கள் ஜமேஷா முபின் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் இந்த வழக்கை கையில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை துவக்குவார்கள் என்று தெரிகிறது.