கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தமிழக உளவுத் துறை செயலிழந்துள்ளது

வானதி சீனிவாசன்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பு நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தெற்கு தொகுதி உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக கோட்டை ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கோவையில் பயங்கரவாத தாக்குதலின் ஆரம்ப முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்படுள்ளது. இறைவன் அருளால் மக்கள் காப்பற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் கோவை வரவில்லை என்பதை குறிப்பிட்டு கூறினார்.

என்.ஐ.ஏ விசாரணை ஏற்கனவே இருந்தாலும், தமிழக உளவுத்துறை உஷாராக இருந்திருக்கவேண்டும்.

பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை வெளியே விட கோரிக்கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநில முதல்வர் கோவை வந்து மக்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்த அவர், மக்களின் உயிரோடு அரசியல் செய்யாதீர்கள் என்றும், கோவை மக்களுக்கு ஆதரவு சொல்ல யாரும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை என்பதை பதிவிட்டார்.

இதை பற்றி முதல்வர் வாயை திறக்காமல் இருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. ஏன் வாயை திறக்க மறுக்கிறார். முதல்வர் மௌனம் காப்பது தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுப்புகிறது. திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலருமே சிறுபான்மையினர் வாக்குகளால் தான் தாங்கள் வெற்றி பெற்றதாக பேசுகின்றனர். அதனால்தான் முதல்வர் இந்த குற்றங்களை கண்டிக்காமல் இருக்கிறாரோ என தோன்றுகிறது. சிறுபான்மை வாக்குகள் மூலம் தான் ஆட்சியில் இருப்பதாக கூறும் திமுக சிறுபான்மை வாக்குகளுக்காக மற்றவர்களின் உயிர்களை பலி கொடுக்க தயாராக இருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது.

75 கிலோ வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது சாதாரண விஷயம் இல்லை என்று கூறிய அவர், கவுரவம் பார்க்காமல் தமிழக முதல்வர் இந்த வழக்கை என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழக உளவுத் துறை செயலிழந்துள்ளது விட்டதாகவும் அவர் பேசினார். மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் கோவைக்கு வருகை தர வேண்டும். உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் சரியான உத்தரவு வழங்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். என தெரிவிக்க வேண்டும்.