வ.உ.சி. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு

கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போதுள்ள உயிரினங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை இந்த உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர். இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது.

இதனால், கடந்த சில மாதங்களாக வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை வ.உ.சி பூங்காவில் உள்ள உயிரினங்கள் நலமுடன் உள்ளதாகவும், அவற்றிற்கு தேவையான அனைத்து வகையான உணவுகளும் தங்கு தடையின்றி வழங்கப்படுவதாகவும், எனினும் விலங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்குவது விலங்குகளின் நலனை மேலும் மேம்படுத்தும் எனவும் தெரிவித்தனர். பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஒரு வார காலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.