அறிவியலை எளிமையாகப் புரிந்துக் கொள்வது எப்படி?

மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி.செயல்விளக்கம்

அறிவியலை எளிமையாகப் புரிந்துக் கொள்வது எப்படி? என்று முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியதுறைகள் இணைந்து நடத்திய, ‘செயல்வழி கற்றலில் அறிவியல் உண்மைகள்’ என்ற பயிலரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் பூங்குழலி வரவேற்றார். கணிதத்துறைத் தலைவர் உமா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையாற்றினார்.

தமிழக முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு பேசியதாவது: அறிவியல் என்றால் அறிந்து கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம். உலக இயக்கமே அறிவியலால் தான் நிகழ்கிறது. அறிவியல் சார்ந்த படிப்புகளில் பொதுவான பார்வை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியன கடினமானவை. இந்த பார்வை தவறானது. இப்பாடப்பகுதிகளைப் புரிந்துக்கொள்ளும் வரை தான் கடினம்.
நீங்கள் ஆர்வம் காட்டி புரிந்துக் கொள்ள முயற்சித்தால் இதைவிட எளிமையான பாடங்கள் இல்லை என்பதே உண்மை. செயல்விளக்கம் மூலமாக அணுகினால், அறிவியலைப் புரிந்துக்கொள்வது மேலும் எளிமையானது.

செயல்விளக்கங்கள் மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டும். இப்பாடப் பகுதிகளைப் புரிந்துக் கொண்டால், அதுகுறித்து சிந்திக்கத் தொடங்கினால் மாணவர்களின் அறிவாற்றல் பல மடங்கு அதிகரிக்கும். ஆராய்ச்சி ரீதியான பார்வை விரிவடையும் எனக்கூறினார்.

அதைத்தொடர்ந்து பலவித உபகரணங்களைக் கொண்டு, அறிவியலை அறிந்துகொள்வது எப்படி? என்று செயல்விளக்கம் அளித்தார். பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அறிவியல் தொடர்பான பயிலரங்குகள் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, ‘இளம் மாணவர்களுக்கு முன்மாதிரி அறிவியல் ஊக்குவிப்பாளர்’ என்ற விருதை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், முதல்வர் சிவக்குமார் வழங்கி கௌரவித்தார்.

இப்பயிலரங்கில் கோவையில் உள்ள 20 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.