மனநல விழிப்புணர்வு ஏற்படுத்தி கே.பி.ஆர் கல்லூரி உலக சாதனை

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், உலக மனநல தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இதன் மூலம் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் உலக சாதனை முயற்சியாக அதிகம் பேர் கலந்து கொண்ட பைக் ரேலி மற்றும் சிரிக்கும் யோகா ஆகிய இரு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் சார்பாக “மனநலமே எங்கள் விருப்பம்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி மனநலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்கள் ஒரு கோடி பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு, அதை அடையும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

இதன் துவக்கமாக கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதிகம் பேர் கலந்து கொள்ளும் பைக் ரேலி மற்றும் சிரிக்கும் யோகா ஆகிய இரு நிகழ்ச்சிகளும் உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்டது.

நம் நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறும் மனநலம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள், பெரும்பான்மையான உடல் சார்ந்த தொந்தரவுகள், மனநலம் சார்ந்த மன இறுக்கம், கவலை, மன அழுத்தம் போன்றவற்றாலே ஏற்படுகிறது என்றும், இந்த பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது என்று தெரிந்து கொண்டால் உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்கின்றனர்.

மேலும் இதைப் பற்றி குறிப்பிட்ட கல்லூரியின் முதல்வர் அகிலா, மக்கள் தங்கள் மனநலம் குறித்து வெளியில் பேச தயங்குகின்றனர் என்றும், எங்களது இந்த முயற்சி மக்களிடையே இருக்கும் தயக்கத்தை விடுத்து, தங்களது மனநலம் குறித்த பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி, சரியான மனநல ஆலோசனைகளை பெற்று இதிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.

காலையில் நடைபெற்ற பைக் ரேலி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சசிகுமார், ச்ருன் 360, கோவை அண்ட் கோ இயக்குனர் சுப்ரஜ் வெங்கட் கலந்து கொண்டனர்.

மாலையில் உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட சிரிக்கும் யோகா நிகழ்ச்சிக்கு மனநல மருத்துவரும் பேராசிரியருமான டாக்டர்.செல்வராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ‘ஆசியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி விவேக் கலந்து கொண்டார்.