காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு?

2019 இல் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல்காந்தி துறந்த பிறகு, கொரோனா காலகட்டம் காரணமாக அப்பதவிக்கான தேர்தல் நடக்கவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வந்த நிலையில், இப்போது அக்.17 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் தலைவராக ராகுல்காந்தி பிடிவாதமாக போட்டியிட மறுத்துவிட்டு கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்துக்கு புறப்பட்டுவிட்டார். இந்நிலையில், அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கிடையே, இப்பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என ராகுல் காந்திக்கு எதிரான ஜி23 தலைவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசிதரூர் அறிவித்தார். கட்சி கட்டமைப்பில் பெரிய அளவு ஆதரவோ அல்லது பிடிப்போ இல்லை என்பதை முன்கூட்டியே ஒத்துக்கொண்டாலும் தான் போட்டியிடுவதில் சசி தரூர் கடைசிவரை உறுதியாக இருந்தார். தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், நாடு முழுவதும் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, தேசிய ஒற்றுமை நடைபயண தொடக்க விழாவில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் தான் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தால் முன்மொழியப்படக்கூடும் என்ற யூகம் இருந்தது. இந்நிலையில் அசோக் கெலோட்டுக்கு அகிய இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால், தான் ஏற்கெனவே உறுதி அளித்தது போல இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கலாம் என்றும் ராகுல் காந்தி கணக்குப் போட்டார்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும்முன்பே காந்தி குடும்பத்துடன் அதிகார அரசியலில் கெலோட் இறங்கியதால் அவரை தேர்வு செய்ய ராகுல்காந்திக்கு விருப்பம் இல்லாமல் போனது. தனது பெயர் வேட்பாளராக அரசல் புரசலாக அடிபடும்போதே, காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்பது நியமன பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தேசியத் தலைவர் பதவி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் அது தனக்குப் பொருந்தாது என்றும் கருத்து தெரிவித்தார். தனது முதல்வர் பதவியை, சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் தான் இவ்வாறு கெலோட் இலைமறை காயாக தன் கருத்தை வெளிப்படுத்தினார். இத்துடன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேரை உசுப்பேற்றி, சச்சின் பைலட்டுக்கு எதிராக கிளர்ந்தௌ செய்து காந்தி குடும்பத்துடன் நேரடியாக அதிகார அரசியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், காங்கிரஸ் தலைவர் பதவியைவிட, ராஜஸ்தான் முதல்வர் பதவியே அதிகாரமிக்கது என்பதையும் கெலோட்டின் நடவடிக்கை உணர்த்தியது. பதவிக்கு வரும்முன்பே அதிகார அரசியலில் ஈடுபடும் கெலோட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் தங்களது குடும்பத்தைவிட்டு கைநழுவிபோகக்கூடும் என உணர்ந்த காந்தி குடும்பத்தினர், தங்களது விருப்பத்துக்கு ஏற்ப அசைந்தாடும் பொம்மை போன்ற தலைவரை தேர்வு செய்ய ஆர்வம் காட்டினர்.

அதன் பிறகு மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக் ஆகிய மூவரில் ஒருவருக்கு காந்தி குடும்ப ஆசி கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. திக்விஜய் சிங் போட்டியிட்டால் மும்முனை போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில், அவரும் ஒதுங்கிக்கொண்டார். எனவே, கார்கே மட்டுமே சோனியா காந்தியின் ஆசி பெற்ற வேட்பாளராக இப்போது களத்தில் உள்ளார். இதற்கிடையே கடைசி நேர திருப்பமாக ஜார்கண்டை சேர்ந்த கே.என்.திரிபாதியும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே மட்டுமே இப்போது நேரடி போட்டி நிலவுகிறது.

இதில் சுவாரசியமான சம்பவம் என்னவெனில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம், சசி தரூருக்கு ஆதரவாக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார். அதேநேரத்தில் ராகுல் காந்திக்கு எதிரான ஜி23 குழுவை சேர்ந்த திபேந்திரசிங் ஹூடா போன்றவர்கள் கார்கேவுக்கு ஆதரவாக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

நேரு, காந்தி குடும்பத்தை சாராதவர்கள் ஏற்கனவே பலமுறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக இருந்துள்ளனர். இதுவரை பட்டாபி சீத்தாராமய்யா, புருஷோத்மதாஸ் தண்டன், யு.என்.தெப்பார், நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர், நிஜலிங்கப்பா, ஜெகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா, தேவகந்தாபரூவா, பி.எல்.நரசிம்மராஜ், சீத்தாராம் கேசரி ஆகியோர் நேரு, காந்தி குடும்பத்துக்கு வெளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களில் காமராஜர், நரசிம்மராவ் ஆகிய இருவரும் நேரு, காந்தி குடும்ப பிடியில் இல்லாமல் மிகுந்த அதிகாரத்துடன் இப்பதவியை வகித்தனர். இக்குடும்ப பிடியில் இல்லாத சூழலிலும் சீத்தாராம் கேசரியால் கட்சியில் முழு அதிகாரத்தை செலுத்த முடியவில்லை.

இதுவரை நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலை பார்க்கும்போது, நேரு, பட்டேல் காலகட்டத்தில் பட்டேலுக்கு கட்சி கட்டமைப்புக்குள் அதிக செல்வாக்கு இருந்ததால் பட்டேல் ஆதரவு பெற்ற வேட்பாளர் புருஷோத்மதாஸ் தண்டன், நேரு ஆதரவு வேட்பாளர் ஜே.பி.கிருபாளினியை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காமராஜர் போட்டியிட்டதால் மொராஜிதேசாய் போட்டியிடவில்லை. இதனால் போட்டியின்றி காமராஜர் தேர்வானார். 1992 இல் நரசிம்மராவ் போட்டியின்றி தேர்வானார். 1996 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பதவி விலகியபிறகு அவரது ஆதரவாளர் சீத்தாராம் கேசரி வெற்றிபெற்றார். சீத்தாராம் கேசரிக்கு எதிராக சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகிய இருவர் போட்டியிட்டனர். இதில் சரத்பவார் 882 வாக்குகளையும், ராஜேஸ் பைலட் 354 வாக்குகளையும் பெற்றனர். கேசரி 6,224 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பிறகு 1999 இல் சோனியா காந்தியும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திர பிரசாதாவும் மோதினர். சோனியா காந்திக்கு 7,448 வாக்குகளும், ஜிதேந்திர பிரசாதாவுக்கு 94 வாக்குகளும் கிடைத்தன.

இந்நிலையில், நேரு, காந்தி குடும்பத்துக்கு வெளியில் இருந்து இப்போது கார்கே இப்பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த குடும்ப ஆசி இருப்பதால் அவர் வெற்றிபெறுவது உறுதி. கார்கே வெற்றிபெற்றாலும் அவர் சுதந்திரமாக செயல்பட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. காங்கிரசை பொறுத்தவரை நேரு, காந்தி குடும்பமே கட்சியை தேசிய அளவில் ஒருங்கிணைக்கக்கூடிய சக்தியாக திகழ்கிறது. அவர்களை தவிர யார் பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு பிற நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

கார்கேவின் பின்னணி காங்கிரசுக்கு உதவுமா என்பதை ஆய்வு செய்து பார்த்தால் அவர் தலித் வகுப்பை சார்ந்தவர் என்பதால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள தலித் மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு நல்லெண்ணத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதேவேளை அவர் தென்மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தேசிய அளவில், குறிப்பாக வடஇந்தியாவில் அது காங்கிரசுக்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறி.

காங்கிரஸ், பாஜக சுமார் 190 தொகுதிகளில் நேருக்கு நேராக களத்தில் மோதுகின்றன. இதில் 90 சதவீத தொகுதிகள் வடஇந்தியாவில் தான் உள்ளன. இவற்றில் 180 தொகுதிகளுக்கு மேல் 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதனால் தான் பாஜக அறுதிபெரும்பான்மையுடன் இருமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடன் நேரடியாக மோதும் தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கான காங்கிரஸின் செல்வாக்கை தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரால் எப்படி உயர்த்த முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏற்கனவே பாஜக தான் நாட்டில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்கேவின் தேர்வு, காங்கிரஸ் தென்னிந்திய கட்சியாக சுருக்கும் வாய்ப்பும் உள்ளது.

கார்கேவின் தேர்வு, கர்நாடகம், தமிழகம், கேரளம், தெலுங்கானா ஆகியற்றில் காங்கிரசுக்கு ஓரளவு கைகொடுக்கலாம். ஆனால், தென்னிந்தியாவில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களே நேரடியாக பிரசாரம் செய்தால் காங்கிரசுக்கு பலம் தானாக அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் பலம் குறைந்த, அதும் பாஜகவுடன் நேரடியாக மோதி வெற்றிபெற வேண்டிய வட இந்தியாவில் இருந்து தலைவராக தேர்வு செய்திருக்க வேண்டும் என்பது தான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

கார்க்கேவின் நியமனம் கர்நாடக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு தலித் வாக்குகள் காங்கிரஸ் நோக்கி திருப்ப இது உதவும். ஆனால், அங்கு ஏற்கனவே சிவக்குமார், சித்தராமையா என இரு கோஷ்டி இடையே பூசல் அதிகரித்துள்ளதால், அதேமாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே தேசியத் தலைவராக வருவதால் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது, முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வது ஆகியவற்றில் குழப்பம் ஏற்படக்கூடும். காரணம், ஏற்கனவே 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, கார்க்கேவை வீழ்த்தி முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிய இந்திய காங்கிரஸ் தலைவராக வெகு விரைவில் பொறுப்பேற்க இருக்கும் மல்லிகார்ஜுன கார்க்கே, காமராஜர் போல அதிகாரமிக்கத் தலைவராக செயல்படுவாரா அல்லது சீத்தாராம் கேசரி போல அதிகாரத்தை பயன்படுத்த முடியாத சூழலில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.