கோவை வ.உ.சி பூங்காவில் இருந்து இடமாற்றப்படும் விலங்குகள்

கோவை வ.உ.சி பூங்காவில் உள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்படுவது கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் சொற்ப அளவில் உள்ள ஊர்களில் ஒன்று தான் நம்ம கோவை. இங்கு பிரதான சுற்றுத்தளங்களாக இருப்பவை கோவை குற்றாலமும், வ.உ.சி பூங்காவும் தான்.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவானது கடந்த 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்குகள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார நாட்களில் இந்த பூங்காவுக்கு நாள்தோறும் 300 முதல் 350 பேர் வரையிலும், விடுமுறை நாட்களில் 2000 பேர் வரையும் வந்து செல்கின்றனர்.

இதனிடையே பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதனால் வ.உ.சி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இந்த பூங்காவில் உள்ள முதலைகள் உட்பட அதன் குட்டிகள் உடுமலை அமராவதி முதலை பண்ணை அல்லது சென்னை முதலைப் பண்ணைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மான்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவையின் பிரதான சுற்றுலாத்தலம் இப்படி இடமாற்றம் செய்யப்படுவது கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பூங்காவை தக்கவைத்துக்கொண்டு விரிவாக்கம் செய்யும் பணியை அரசு துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.