ஆரோக்கியமற்ற பழக்கத்தால் ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்!

– மருத்துவர் அருண் கௌஷிக், நிர்வாக இயக்குனர், ஷேடோ கிளினிக்ஸ் & டயக்னோஸ்டிக்

– பகுதி நேர மருத்துவர், இருதயத்துறை, பி.எஸ்.ஜி மருத்துவமனை

முன்பெல்லாம் இருதய நோய் என்பது வயதின் முதிர்ச்சியினாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக மரபணு காரணங்களால் ஏற்படும் குறைபாடாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வாழ்க்கை முறை பழக்கங்கள் மிக வேகமாக மாறி வருவதால் மிக சிறிய வயது உடையவர்களுக்கும் கூட இருதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

இருதயம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும், காலம் தாழ்த்தாமல் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதே இருதய நோய்களை வெல்லும் ஒரே யுக்தி என்கிறார் ஷேடோ கிளினிக்ஸ் & டயக்னோஸ்டிக் மையத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் கௌஷிக் (இண்டெர்வென்ஷனல் கார்டியோலோஜிஸ்ட்).

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆயுளை குறைக்கும்!

கடந்த 30 – 40 ஆண்டுகளில் தொழில் நுட்பங்களும், துரித உணவு கலாச்சாரமும் முன்னேறிச் செல்ல, மனிதர்களுடைய ஆரோக்கியம் என்பது பின்னே சென்று கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை, என்கிறார் மருத்துவர் அருண் கௌஷிக்.

குறையும் உடல் உழைப்பு, அதிகமான ஆரோக்கியமற்ற துரித உணவுகளை உண்ணுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம், போதிய நேரம் உறங்காமல் இருத்தல், அதிக நேரம் கணினி, கைபேசி தொலைக்காட்சி முன்பு அமர்தல், ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட எளிதில் வழி வகுக்கிறது.

முன்பெல்லாம் மக்களுக்கு 60 – 65 வயதுகளில் மாரடைப்பு ஏற்படுவது மாறி 50 வயதினருக்கு ஏற்பட துவங்கியது. ஆனால் இன்று அந்த வயதுக்கான அளவுகோல் குறைந்து மிக இளம் வயதில் இருக்கக்கூடிய நபர்களுக்கும் (20 – 30 வயதினர்) மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு என்பது ஆண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடியதாக இருந்தது. ஏனென்றால். பெண்களுக்கு இயற்கையாகவே உடலில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து வந்திருந்தது. ஆனால் இப்போது பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

முன்பு இந்தியாவில் இருதய நோயாளிகளின் சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது இருதயம் நோய் மற்றும் சர்க்கரை நோயில் நமது நாடு முன்னிலையில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இருதயம் மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களின் சதவீதம் அதிகமாகி இருக்கிறது. உலக அளவிலேயே மனிதர்களுடைய ஆயுட்காலம் என்பது குறைய தொடங்கியுள்ளது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன.

வளர்ந்து வரும் விரிவான இதய நல சிகிச்சைகள்:

இன்றைய காலகட்டத்தில் இருதய நோய்கள் அதிகம் ஏற்படுவது வருத்தமாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அறிவியலின் வளர்ச்சி அதிகரித்து இருப்பதால் இன்று இருதய நோய்களுக்கான சிகிச்சைகள் பன்மடங்கு முன்னேறியும், மேம்பாடு அடைந்தும் இருக்கிறது.

இருதயவியல் துறை ஆரம்ப கட்டங்களில் நோயாளியின் இருதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையும் மருந்தும் தரக்கூடிய ஒரு துறையாக தான் இருந்தது. அதன் பிறகு இருதயங்களில் இருக்கக்கூடிய அடைப்புகள், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சை செய்ய ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் (Angiogram, Angioplasty, Pacemaker) போன்ற சிகிச்சை முறைகள் வந்தன.

அதன் பின்பு ரத்த நாளங்களுக்குள் இருக்கும் சுருக்கங்களை, அடைப்புகளை நுண்துளை சிகிச்சையின் மூலமாக ஸ்டன்ட்டுகள் பொருத்தி ரத்த ஓட்டங்களை சீர் செய்வது, இருதயத்தின் துடிப்பு குறைவாக இருந்தால், அந்தத் துடிப்பை செயற்கையாக சீராக துடிக்க வைக்க பேஸ்மேக்கர் சாதனங்களை இருதயத்தோடு இணைத்து வைப்பது ஆகிய வழிமுறைகள் வந்தது.

தற்போது முழு இருதயத்தை அதிநவீன சாதனங்கள் கொண்டு ஆய்வு செய்வது, மருந்துகள் மூலமாக சிகிச்சைகள் வழங்குவது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வருவது போன்ற சிகிச்சைகள் வந்துள்ளது.

நோய் வருவதற்கு முன்பே அதை ஏற்படுத்தும் காரணிகளை பரிசோதனைகள் மூலம் கண்டறிவது, கண்டறிந்த பின் சிகிச்சை வழங்குவது, சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளியின் வாழ்க்கை முறை பழக்கங்களை திருத்துவது, அதாவது உணவு முறையில் மாற்றங்களை பரிந்துரைப்பது, பிசியோதெரபி வழங்குவது என பலவும் விரிவான இதய நல சிகிச்சைகளுக்குள்(cardiac rehabilitation) அடங்கும்.

இதயத்தை பாதுகாப்பதில் ஷேடோ கிளினிக்கின் பங்கு:

ஷேடோ கிளினிக் & டயாக்னாஸ்டிக்ஸ் என்பது முதற்கட்டமாக நோய்கள் பற்றிய விழிப்புணர்வையும், நோய்கள் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும், அதற்கு பின்பு ஒருவர் எப்படிப்பட்ட மருத்துவ உதவிகளை சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற தகவலையும், புரிதலையும் நோயாளிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய ஒரு மையம்.

கோவையில் முதன்முறையாக வெளி நோயாளிகளுக்கு என்றே பிரத்தியேகமாக வெவ்வேறு உடல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை வழங்கும் பல கிளினிக்குகளும், நோய்களைக் கண்டறியக்கூடிய ஆய்வுகளான இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட், சி.டி.ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யும் மையமாக 2022 இல் இது நிறுவப்பட்டது. இதனுடனே மருந்தகமும், ஆய்வுக்கூடமும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

வெளியே இருந்து வரக்கூடிய நோயாளிகளுக்கு இங்கே மிகக் குறைந்த நேரத்தில் அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. உடலை முழுமையாக பரிசோதனை செய்யக்கூடிய ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ இங்கு மிக சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. மாஸ்டர் ஹெல்த் செக்கப்பை பொறுத்தவரை அரை நாளுக்குள்ளேயே அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடிக்கக்கூடிய வேகம் இந்த மையத்தில் இருக்கிறது.

ஷேடோ கிளினிக் மற்றும் டயாக்னாஸ்டிக்ஸ் என்பது கோவையில் ஒரு தனித்துவமான மையம் என்றே சொல்லலாம். இங்கு இருதயம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை கண்டறிவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் நோய் இருப்பதை முன்கூட்டியே கண்டறிவது அவசியமாகிறது. ஒருவரின் இருதய ஆரோக்கியம் எந்த அளவு உள்ளது என்பதை இங்கு வழங்கும் பரிசோதனைகள் மூலமாக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு தெரிந்து கொண்ட பின்பு அதற்கு சிகிச்சைகள் வழங்கக்கூடிய இருதயவியல் வல்லுனர்களிடம் அடுத்த கட்ட முக்கிய சிகிச்சைகளைப் பெற இந்த மையம் பரிந்துரை செய்யும்.

இருதயம் மற்றும் நீரிழிவு கிளினிக் (Cardio Diabetic Clinic):

இருதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் நெருக்கமான ஒரு தொடர்பு உண்டு. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். கார்டியோ டையாபெடிக் கிளினிக் என்பது இருதயம் மற்றும் நீரிழிவு என இரண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுள்ளது.

எனவே ஷேடோ கிளினிக்ஸில் செயல்படக்கூடிய இருதயம் மற்றும் நீரிழிவு கிளினிக்கின் மூலம் ஒரே இடத்தில் சர்க்கரை நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறியவும் முடியும்.

கார்டியோ டையாபடிக் கிளினிக்கில் வழங்கும் சிகிச்சை முறைகள் வழக்கமான சிகிச்சைகளை விட வித்தியாசமானது. அதாவது இதில் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம், யோகா பயிற்சி, மருந்துகள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து அதற்கான சிகிச்சைகள் வழங்கும் இடமாக உள்ளது.

மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கக்கூடிய தற்போதைய காலத்தில் ஒரே மருந்து இருதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் பயன்படும். எனவே இந்த கிளினிக்கில் ஒருவருக்கு இருதய நோய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிந்து கொள்ள முடியும். மிகத் தீவிரமான இருதய நோய்க்கும் அல்லது சர்க்கரை நோய்க்கும் பிரத்தியேக மருத்துவமனைகளின் உதவி தேவைப்படும்.

தீவிர இருதய சிகிச்சை எடுத்த பின்பு (Cardiac Rehabilitation Centre):

நோயாளிகள் இருதய நோய்க்கான சிகிச்சை எடுத்த பின்னர் அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல உதவிகள் தேவைப்படும். அதை ஷேடோ கிளினிக்சில் செயல்படும் இருதய புனர்வாழ்வு மையம் மூலம் வழங்க முடியும்.

இருதய நோயால் பாதிப்படைந்தவர்களை மீண்டும் பழைய உடல் நிலைக்கு கொண்டு வருவது தான் இந்த மையத்தின் நோக்கம். இருதய நோயாளிகளின் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளை அவர்கள் வாழ்வில் முன்பிருந்ததைப் போலவே இருதய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு பின்னரும் அமைத்து தர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த மையம் செயல்படுகிறது.

இங்கு இருதய நலனை பற்றிய தெளிவு உடைய பிசியோதெரபி வல்லுனர் உதவியுடன் நோயாளிகளுக்கு நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை கற்றுத்தந்து, மெல்ல மெல்ல நோயாளியின் உடல் மற்றும் இருதய நலனை அதிகரித்து, பழைய வாழ்க்கை தரத்தை தொடர வைப்பது இதன் நோக்கம்.

இயல்பு வாழ்க்கையில் இருக்கும் ஒருவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்படும் போது நோயாளியும், அவரது குடும்பத்தாரும் மனதளவில் மிகவும் பாதிப்படைவார்கள். நோயாளி மீண்டும் தனது பழைய இயல்பு வாழ்க்கைக்கும், மனநிலைக்கும் திரும்புவாரா என்ற கவலை இருக்கும். இதற்கு தீர்வு அளிக்கும் விதமாகத்தான் புனர்வாழ்வு மையம் செயல்படுகிறது.

இங்கு இருதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, உடற்பயிற்சி ஆகியவை பற்றிய முழு தகவல்களும் செய்முறை விளக்கங்களும், பயிற்சியும் வழங்கப்படும். ஒருவேளை மனதளவில் அவர்கள் சோர்ந்து போய் இருந்தால் அதற்கு சிகிச்சை வழங்கக்கூடிய மனநல ஆலோசகர் உதவியும் இந்த மையத்தில் வழங்கப்படும்.

உலக இருதய தினத்திற்கான செய்தி:

இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இருதய நாள் கொண்டாடப்படுகிறது.

உடல் உறுப்புகள் அனைத்தும் அதன் ஆற்றலுடன் செயல்பட முக்கிய பங்காற்றுவது இருதயம். ஆரோக்கியமற்ற பழக்கங்களால் உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.

புகைப் பழக்கத்தை, மதுவை கைவிடுங்கள், வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள், முக்கியமாக இருதயம் சமந்தமாக எந்த அசௌகரியமாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். நோய் வந்தபின் வருந்துவதை விட வருவதற்கு முன்பு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்வது அவசியமான ஒன்று.