ஆர்.வி. கல்லூரியில் பெண்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் சார்பில் குழந்தை நலப் பாதுகாப்பு அமைப்பும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் குழு அமைப்பும் இணைந்து “வளர் இளம் பெண்களுக்கான வாழ்க்கை திறன் கல்வி” நிகழ்வினை நடத்தியது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் காரமடை வட்டாரச் சுகாதாரத் துறை செவிலியர் மங்கையற்கரசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘ மனித ஆற்றல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில் “பெண்கள் இந்நாட்டின் கண்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களைச் சார்ந்துதான் அமைகிறது. வீட்டை நிர்வகிப்பதிலும், நாட்டை நிர்வகிப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் மனதளவில் மிகுந்த பலசாலிகள். ஆனால் உடல் அளவில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமாகிறது.

குறிப்பாக 18 வயதைத் தொடும் வளர் இளம் பெண்கள் துரித உணவுகளை தவிர்த்து சத்தான காய்கறிகள், தானிய வகைகள், பழ வகைகள், கீரை வகைகளை உண்ணுதல் வேண்டும். சரியான வேளையில் சாப்பிடுதல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எந்த சூழ்நிலையிலும் மனதைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தருதல் வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மொபைல் போன்களுக்கு அடிமையாகி சில பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அதனைத் தவிர்த்து செல்போனை நல்லவற்றிற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தீயதை விட்டு விடுதல் மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். நம் வாழ்க்கை நம் கையில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.” என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த பத்மநாபன், சுகாதாரத்துறை செவிலியர் ஜெயலஷ்மி மற்றும் திட்ட உதவிக்குழு பெண்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.