டெங்கு தடுப்பு நடவடிக்கை: குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு பணி தீவிரம்

டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலப்பு பணிகள் மாநகராட்சியால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியார் போன்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதில், சிறுவாணி மூலம் பெறப்படும் குடிநீர் 20 க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு தரப்படுகிறது.

இதுபோன்று பெறப்படும் குடிநீர் மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் அபேட் மருந்து கலக்கப்படுகிறது. மேலும், மாநகரில் உள்ள மாநகராட்சியின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்படுகிறது என்றார்.