வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ரூ.96 விலை குறைப்பு

வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்ந்தது. ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதால் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96.00 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,141 இல் இருந்து ரூ.2,045 ஆக குறைந்துள்ளது.

அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.