விண்வெளியில் அரிசி சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை

சீனா, விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தரமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான கட்டுமான இன்னும் பணி நிறைவடையவில்லை.

இந்த நிலையில், சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் சீன விஞ்ஞானிகள் தாலே கிரஸ் மற்றும் அரிசி விதைகளை பயிரிட்டுள்ளனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் மாதத்தில் தொடங்கியது.

முட்டைகோஸ் போன்ற பசுமையான இலைகளை கொண்ட காய்கறிகளை ஒத்தது தான் தாலே கிரஸ் செடி. இவை 4 இலைகளை உற்பத்தி செய்தது. ஆனால், அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இந்த செடிகளை பூமி போன்ற சூழ்நிலையை ஒத்த, செயற்கை சூழலை பயன்படுத்தி வளர்த்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும் சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் ஜூலை மாதம் முதலே விண்வெளியில் தாவர விதைகளை வளர்ப்பது தொடர்பான ஆய்வில் சீனா ஈடுபட்டு வருகிறது.

பூமி போன்ற சூழலை ஒத்த, செயற்கை சுற்றுச்சூழலை கொண்டு மட்டுமே இந்த பயிர்களை வளர்க்க முடியும் என்றும், செடிகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு, விண்வெளியில் தகவமைத்து கொள்ளும் வகையிலான கூடுதல் பயிர்களை ஆய்வின் வழியே நாம் கண்டறிய முடியும் எனவும் சீன அறிவியல் அகாடெமியின் ஆராய்ச்சியாளர் ஜெங் ஹுகியாங் கூறியுள்ளார்.