விநாயகர் சதுர்த்தி சிலையில் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது என்றும், சுற்றுச்சூழலுகுகந்த இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.

மேலும், விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறியுறுத்தப்பட்டுள்ளது.

1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.