ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைப்பு சாத்தியமாகுமா?

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மீண்டும் இணைந்து செயல்படுவது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“அ.தி.மு.க.,வில் கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்‘’ என அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடரும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.
தொடர்ந்து தீர்ப்பு வந்த மறுநாள் காலை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்டால் யாராலும் வெல்ல முடியாது என்பது நிரூபணமான ஒன்று. எங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.கவுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதில் எங்களுக்குப் பெரும் பாதிப்புதான், இருந்தாலும் பரவாயில்லை.
அ.தி.மு.கவினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்து கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருடன் முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்‘’ என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால், பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஒரு மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பன்னீரின் அழைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, “அ.தி.மு.க இயக்கத்தைச் சிலர் தங்கள் வசம் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதைத் தடுக்கும் போதுதான் சில பிரச்சனைகள் உருவாகின்றன. பொதுக்குழு உறுப்பினர்களால் தான் அ.தி.மு.க வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அ.தி.மு.கவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒற்றைத் தலைமை வேண்டும் என மக்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகின்றனர். ஓ.பி.எஸ் மகனும், எம்.பி.,யுமான ரவீந்திரநாத், ஸ்டாலினைச் சந்தித்து சிறப்பான ஆட்சி என வாழ்த்து சொல்வது எப்படிச் சரியாகும். அ.தி.மு.க தொண்டர்கள் அதை எப்படி ஏற்பார்கள். ரௌடிகளை வைத்து அ.தி.மு.க அலுவலகத்தை ஓ.பி.எஸ் தாக்கினார். அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். உயர்ந்த பொறுப்பில் இருக்கிற ஓ.பி.எஸ் இப்படித் தாழ்வாக, அநாகரிகமாக நடந்துகொண்டால் எப்படி அவருடன் இணைந்து பணியாற்ற முடியும்.
ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ் உடன் 15 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓ.பி.எஸ்., ஏன் நீதிமன்றங்களை நாடிச் சென்றார்?’’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு, இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிற ரீதியில் பதிலளித்தார்.
அதேநாளில், சென்னை உயர் நீதிமன்றத்தில், துரைசாமி, சுந்தர்மோகன் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.
இணைய முடியுமா?:
அதிமுகவை பொறுத்தவரை நீதிமன்ற தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தலா 50 சதவீத அதிகாரம் உள்ளது. ஆனால், கட்சி அளவில் 95 சதவீத நிர்வாகிகள், 63 எம்.எல்.ஏ.க்கள் என 95 சதவீத கட்சி பலம் உள்ளது. ஆனால், பன்னீர்செல்வத்துக்கு 5 சதவீத கட்சி நிர்வாகிகள், 3 எம்.எல்.ஏ.க்கள் என 5 சதவீத பலம் தான் உள்ளது.
இப்போது 95 சதவீத கட்சி பலம் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனக்கு 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீத அதிகாரத்தை பெறுவதற்கான முயற்சியிலும், 5 சதவீத கட்சி பலம் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு இருக்கும் 50 சதவீத அதிகாரத்தை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்ற இலக்குடன் அரசியல் நகர்வு செய்து வருகின்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனக்கு 95 சதவீத கட்சி பலம் இருக்கும் நிலையில், 5 சதவீத பலமே இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு 50 சதவீத அதிகாரத்தை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என எண்ணுகிறார். அதிமுகவில் 50 சதவீத அதிகாரத்தை தக்கவைக்க பன்னீர்செல்வம் சமாதானம் பேசுவதற்காக வெள்ளைக்கொடியை உயர்த்துகிறார். ஆனால், 100 சதவீத அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துக்கொள்ள எண்ணும் எடப்பாடி பழனிசாமி அதை மறுக்கிறார். யாருக்கு எவ்வளவு அதிகாரம் என்ற போட்டி தான் இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலைக்கு இருவரையும் தள்ளிவைத்துள்ளது.
எதிர்காலத்தில் என்ன நடக்கும்?:
இன்னும் 2 ஆண்டுகள் கழித்து 2024 இல் தான் மக்களவைத் தேர்தல் வருகிறது. அதற்குள் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியும், தேர்தல் ஆணைய கதவைத் தட்டியும் எப்படியாவது அதிமுகவை தன்வசப்படுத்த தொடர் முயற்சியில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 ஆண்டுகளுக்குள் கட்சியில் தனக்கு இருக்கும் 5 சதவீத ஆதரவை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி அதிமுகவில் தான் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபித்து தனக்கான 50 சதவீத அதிகாரத்தை தக்கவைக்க கணக்குப் போடுகிறார் பன்னீர்செல்வம்.
மக்களவைத் தேர்தலின்போது இரட்டை இலை முடங்கும் சூழ்நிலை வந்தாலும்கூட பரவாயில்லை, தன்னிடம் இருக்கும் 95 சதவீத கட்சி நிர்வாகிகள், 63 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் தனித்து களம் இறங்கினால் கடந்த சட்டப்பேரவையில் அதிமுக பெற்ற 33 சதவீத வாக்கு சதவீதத்தில் பெரும் பகுதியை தன்னால் பெற முடியும் என எண்ணுகிறார் எடப்பாடி பழனிசாமி.
தனது சொந்த சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்தின் 4.5 சதவீத வாக்குகள், 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்ததால் பாமக நிறுவனர் ராமதாசையும் மீறி 13 சதவீத வன்னியர்கள் வாக்குகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் என மொத்தமாக 22.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று அதிமுகவில் இரண்டு பிரிவுகளில் தன்னால் முதன்மை சக்தியாக வர முடியும். அப்படி வந்துவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் தனக்கு பின்னால் ஒரே அணியாக திரண்டு வருவார்கள் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திர திட்டம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எடப்பாடி பழனிசாமி கொடாக் கண்டன் என்றால் பன்னீர்செல்வமோ விடா கண்டன் போல திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இரட்டை இலை முடங்கிவிட்டால் எடப்பாடி பழனிசாமியை விட தன்னால் கூடுதலாக வாக்குகளை பெற முடியும் என கணக்குப்போட்டு வருகிறார் பன்னீர்செல்வம். பிரதமர் மோடி தன்னை எப்படியும் கைவிடமாட்டார். எடப்பாடி பழனிசாமியை கூட்டணிக்கு சேர்க்கமாட்டார். எனவே, பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி, பாஜக, தேமுதிக, டி.டி.வி.தினகரனின் அமமுக, நடிகர் கமலின் ம.நீ.ம., புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் மருத்துவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர்களை கூட்டணியாக சேர்த்துப் போட்டியிடும்போது அந்த அணி, எடப்பாடி பழனிசாமி அணியை விட கூடுதல் வாக்கு வலிமையை பெறும்.
பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால், எடப்பாடி பழனிசாமி அணியால் 15 சதவீத வாக்குகளை கூட பெற முடியாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் 2026 பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக தன் பின்னால் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு வர வாய்ப்பு உருவாகும் என பன்னீர்செல்வம் கணக்குப் போட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோல இருவருமே 2026 பேரவைத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை மையமாக வைத்து தங்ககளது அரசியல் நகர்வுகளை செய்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே ஒன்றுபட்டஅதிமுகவில் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என அடித்துச் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
2026 இல் கூட்டணியாக செயல்படலாம்
இது குறித்து அரசியல் திறன் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, 1989 இல் அதிமுக ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் இரு பிரிவுகளாக பிரிந்தபோது ஜெயலலிதாவுக்கு 22 சதவீத வாக்குகளும், ஜானகிக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஜானகி திடீர் அரசியல்வாதியாக இருந்ததால், தானாக ஒதுங்கிக்கொண்டதால் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே திடீர் அரசியல்வாதிகள் அல்ல. முழுநேர அரசியல்வாதிகள். ஜெயலலிதாவிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிந்து, குனிந்து அரசியல் லாபம் பெற்ற திறமையான அரசியல்வாதிகள். எனவே, யாருக்கு எவ்வளவு வாக்கு வலிமை கிடைத்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இருவருமே விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் இரட்டை இலை முடங்கவே அதிக வாய்ப்பு ஏற்படும்.
அவ்வாறு முடங்கும்போது இருவரும் தனித்தனியாக 2024 மக்களவைத் தேர்தலில் களம் இறங்குவார்கள். ஜாதி பலம், கட்சி பலத்தை பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு, பன்னீர்செல்வத்தை விட கூடுதலாக வாக்கு வலிமை கிடைக்கலாம். ஆனால், பன்னீர்செல்வத்துக்கும் கணிசமான வாக்கு வலிமை கிடைக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக விவகாரம் சமரசம் ஏற்படாமல் ஜவ்வாகவே இழுக்கும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த 2016 பேரவைத் தேர்தலில் 1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சி இப்போது 6.85 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் பெற்ற கூடுதல் 6 சதவீத வாக்குகள் அதிமுகவில் இருந்து நகர்ந்த வாக்குகள் தான். இப்போது பாஜகவும் திமுகவுக்கு எதிராக துடிப்பான எதிர்கட்சியாக செயல்படுவதால் அதிமுகவில் உள்ள இந்துத்துவா வாக்குகளும் பாஜகவை நோக்கி நகரவாய்ப்பு உள்ளது.
எது எப்படி இருந்தாலும் 2024 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரில் யாருக்கு அதிக வாக்கு வலிமை கிடைக்கிறதோ அவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக வலிமையான முதல்வர் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.