பல நூற்றாண்டு விழாவை பி.எஸ்.ஜி காண வேண்டும்!

– பி.எஸ்.ஜி கலை கல்லூரியின் பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

தனது வரவேற்புரையில் கூறியதாவது: பி.எஸ்.ஜி அறக்கட்டளை தொடங்கி 97 ஆண்டுகளாக தொடர்ந்து தொழில், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. 1924 ஆம் ஆண்டு சர்வஜனா எனப் பெயரிடப்பட்டு எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பள்ளி கல்வி வழங்கும் நோக்கில் முதல் பள்ளி துவங்கப்பட்டது.

இந்திய நாடு விடுதலை அடைந்த அதே மாதம் மற்றும் வருடத்தில் துவங்கப்பட்ட பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி உயர் கல்விப் பணியில் 75 ஆண்டுகளை கடந்துள்ளது. 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்களையும், 600 ஆசிரியர்களையும், 200 பணியாளர்களையும் கொண்டு இந்தக் கல்லூரி இந்தியாவின் மிகப்பெரிய உயர் கல்வி கல்லூரியாக திகழ்ந்து வருகிறது.

இந்தக் கல்லூரி 1978 ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்று, பல்வேறு தர நிர்ணயங்களில் முன்னிலைப் பெற்று நாட்டின் தலை சிறந்த நிலையை அடைந்துள்ளது.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுகிறது. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நிலையிலும் தமது பணியை இந்தக் கல்லூரி சிறப்பாக செய்து வருகிறது.

இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி, தரம் மற்றும் திறமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக அவர்களின் தரம் மேம்பாட்டு அடைய வழிவகை செய்து வருகிறது.

கல்லூரியின் 75 ஆண்டுகள் தொடர் சேவையை முன்னிட்டு கல்விக்கும் அப்பாற்பட்டு தமிழகத்தின் கைவினை பொருள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த கலைஞர்களை இக்கல்லூரி ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மண்பானை கலைஞர்களின் படைப்புகளை பரவலாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதற்காக 75,000 கைவினை பானைகள் செய்து சேகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் மிக சிறந்த உயர் கல்வி சேவையையை சமுதாய நோக்குடன் இந்தக் கல்லூரி தொடர்ந்து வழங்கும் என உறுதிபடக் கூறுவதாகத் தெரிவித்தார்.

கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்: இந்நிகழ்வை ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியாக பார்க்கவில்லை என்றும், எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகவே தான் பார்ப்பதாக குறிப்பிட்டார். இக்கல்லூரி நேரம் தவறாமல் கட்டுப்பாடுடன் நடப்பதற்கு ஒரே உதாரணம் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் படியே நிகழ்வுகள் நடைபெறுவதாக தன் உரையில் பதிவிட்டார்.

தனிப்பட்ட தன்னுடைய குடும்பத்திற்காக மட்டும் வாழாமல் பொது மக்கள் அனைவருக்காகவும், பொது நன்மைக்காகவும் வாழ்ந்தவர் பி.எஸ். கோவிந்தசாமி. வணிகத்திலும், வேளாண்மையிலும் தான் ஈட்டிய சொத்துக்களை தனது 4 புதல்வர்களுக்கு மட்டுமில்லாமல் ஐந்தாவதாக அறநிலையத்திற்கும் சேர்த்து பிரித்து கொடுத்த பெருந்தன்மைக்கு உரியவர். இந்த சிந்தனை நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உதயமாகி இருப்பது பாராட்டுக்கும், மரியாதைக்கும் உரியது.

1926 ஆம் ஆண்டில் 2 லட்சத்து ஆயிரத்து 116 ரூபாயில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நவீன வசதியோடு பல்வேறு தொழில் அறிவியல் படிப்புகளை அறிமுகம் செய்து மாணவர் சமுதாயத்திற்கான அறிவு நலனை தேடித் தருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

1947 ஆம் ஆண்டு ஜி.ஆர் கோவிந்தராஜுலு, ஜி.ஆர் தாமோதரன் ஆகியோரால் இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. பூளைமேடு சாம நாயுடு கோவிந்தசாமி நினைவாக பூ.சா.கோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பூளை எனப்படும் பூ அதிக அளவில் விளைந்த பகுதி இது. அதனால்தான் இப்பகுதிக்கு பூளைமேடு என்னும் பெயர் வந்தது. இன்று பீளமேடு என்று சொல்கிறோம்.

ஆனால் பி.எஸ்.ஜி என்பதன் பொருளாக People, Service, Good என்பதே, மக்களுக்கு உண்மையான சேவையை சிறப்பாக செய்யக்கூடிய நிறுவனம் இது என்பதால் பி.எஸ்.ஜி என அழைக்கப்படுவதாக தான் நினைப்பதாக குறிப்பிட்டார்.

1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு எதிராக தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தியது. தமிழை காக்க தனது உடலுக்கு தானே தீ மூட்டியும், நஞ்சு உண்டும் தமிழ்நாட்டு மொழி காவலர்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பீளமேடு தண்டாயுதபாணி, அவர் பி.எஸ்.ஜி யில் படித்த மாணவர். தமிழுக்காக உயிர்கொடுத்த மாணவர் ஒருவர் படித்த கல்லூரி தான் இது.

தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலகப் புகழ் பெற்ற தொழில் அதிபராக வியந்து நிற்கக் கூடிய, ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ் நாடார் படித்த கல்லூரியும் இது தான். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திட்ட இயக்குனராக இருந்து இந்தியாவின் அறிவியல் ஆற்றலை உலகிற்கு உணர்த்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை படித்ததும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

பி.எஸ்.ஜி அறநிலையம் கல்வி, மருத்துவம், ஆன்மிகம், தொழில் நுட்பம், சமூக சேவை என பல பிரிவுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனிதநேயத்தின் கிளைகள்.

பி.எஸ்.ஜி அறநிலையத்தார் அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற சமதர்ம சமத்துவத்தை சிந்தனையாக கொண்டிருக்கக்கூடியவர்கள். அதனால் தான் படிப்படியாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்தக் கல்லூரியில் 60 % மாணவிகள் படிப்பதும், 60 % பெண் ஆசிரியர்கள் இருப்பதும் பாராட்டுக்குரியது. தமிழகத்தின் அறிவியல் தமிழை வளர்த்ததில் மிக முக்கியமான பங்கு பி.எஸ்.ஜி கல்லூரியின் கலை கதிர் இதழுக்கு உண்டு என கூறிய அவர், கலைஞர் கருணாநிதி இந்த இதழை தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர் என்றார்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாநிலமாக உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்களும், தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன்னாள் நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில் கல்விக்காக போட்ட விதை தான் இதற்கு காரணமாக அமைந்து இருக்கிறது. பி.எஸ்.ஜி போன்ற கல்வி அறக்கட்டளைகள் தங்களுடைய கல்வி தொண்டை 75 ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கியதுதான் இதற்கு அடிப்படையாக அமைந்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசு கல்விக்காக உன்னதமான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவரும் அனைத்து துறையிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

இன்னும் பத்து ஆண்டுகளிலே தமிழ்நாட்டு இளைஞர்கள் அடையக்கூடிய தகுதி உயர்வை எண்ணி பூரிப்படைகிறேன். அனைத்து ஆற்றலையும் கொண்டவர்களாக நமது இளைஞர்கள் உள்ளனர் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் இளைஞர் சமுதாயம் குறித்த ஒரு வித கவலையும் உள்ளது.

போதை பழக்கத்திற்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக இருக்கிறது. அதற்காகவே இந்த அரசு விழுப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஒரு மாணவன் அந்த பழக்கத்திற்கு அடிமையாவது அவனுக்கும், அவனது குடும்பத்துக்கும் மட்டுமில்லை இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே தடையாக இருக்கும். அதிலும் குறிப்பாக மாணவிகள் சிலரும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது கவலை அளிக்கிறது. நல்ல கல்வி உடன், நல்ல ஒழுக்கத்தையும் கற்று தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு என்று தனது வேண்டுகோளை முன் வைத்தார்.

ஒரு பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பவள விழாவில் கலந்து கொண்டது மன நிறைவோடு இருப்பதாகவும், இன்னும் பல நூற்றாண்டு விழாக்களை இந்நிறுவனம் காண வேண்டும் என்று வாழ்த்தினார்.

முன்னதாக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக திறந்த வெளி அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு கல்லினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் நலிவடைந்த பானை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் 75,000 பானைகளை வனைய செய்து பி.எஸ்.ஜி கலை கல்லூரி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழை உலக சாதனை அமைப்பின் நடுவர் முதல்வரிடம் வழங்கினார்.

நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், கல்லூரி முதல்வர் பிருந்தா, பி.எஸ்.ஜி நிறுவனங்களின் பணியாளர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.