மத்திய ஜவுளி அமைச்சருக்கு சிட்டி மற்றும் சைமா பாராட்டு

இந்திய பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியின் முழுமையான வளர்ச்சிக்கான மத்திய ஜவுளி மற்றும் விவசாய அமைச்சர்களின் முயற்சிகளுக்கு இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (CITI), பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (TEXPROCIL) மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) பாராட்டு தெரிவித்துள்ளது.

பருத்தி உற்பத்தி, உற்பத்தித்திறன், தரம் மற்றும் இந்திய பருத்தியின் முத்திரையை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை உணர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பருத்தித்துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த சுரேஷ் ஏ கோடக் தலைமையில் ஜவுளி ஆலோசனைக் குழுவை அமைத்து இரண்டு கூட்டங்களை நடத்தினார்.

மேலும், பருத்தி சார்ந்த அனைத்து தரப்பினரின் கூட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஜூலை 24 ஆண்டு டெல்லியில் நடத்தினார். அதில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். தற்போதைய சவால்களைத் தணிக்க மட்டுமன்றி, பிரதமரின் தொலைநோக்கு பார்வையான 5Fs என்ற இலக்கை அடைவதற்கு தேவையான பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால உத்திகள் பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மனோஜ்குமார் பட்டோடியா மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (SIMA) தலைவர் ரவிசாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினர். பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த உலகளவில் சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும், அமைச்சர் கூறியது போல் பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினர்களின் நலனுக்காகவும், இந்திய பருத்தி மற்றும் ஜவுளி தயாரிப்புகளை பிராண்டிங் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

விவசாய நிலம் முதல் தொழில் வரை பரிசோதனை வசதிகள் மற்றும் சுத்தமான மாசில்லாத பருத்தி உற்பத்தி ஆகியவை விரைவில் இந்திய பருத்தி மற்றும் அதன் ஜவுளி தயாரிப்புகளை மற்ற சர்வதேச பருத்திக்கு இணையாக முத்திரை பதிக்க உதவும்.

சரியான விதைகளைப் பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகள் ஆகியவற்றை பயன்படுத்துவது பருத்தி விவசாயிகளின் மகசூல் மற்றும் இலாப வரம்புகளை அதிகரிக்க உதவும் என்றும் பாராட்டியுள்ளனர்.