கொட்டாவி ஏன் வருகிறது?

பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கொட்டாவி விட்டாலோ அல்லது கொட்டாவி என்ற பேச்சை எடுத்தாலோ நம்மை அறியாமல் அது தொற்றிக் கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம் என்று தெரியனுமா? வாங்க இதை படியுங்க தெரிஞ்சுக்கலாம். அட, நீங்க ஏங்க கொட்டாவி விடுறிங்க? கொட்டாவி விடாம படிங்க.

கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதனால் தான் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்கின்றோம்.

கொட்டாவி விடும்போது நமது உடல் ஓய்வு நிலையிலோ பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. கொட்டாவி விடும் போது வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.

உடல் சோர்வினாலோ களைப்பினாலோ அல்லது தூக்கம் வருவதற்கான அறிகுறிகள் இருக்கும் போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை.

நமது உடலில் இயற்கையாகவே அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி வருகிறது.

குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சேர்ந்த பூனை, நாய், போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும், கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணெய் போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம் எனவும் கூறுகிறார்கள்.

எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை.

எந்த ஒரு வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தால் கொட்டாவி வரும். எனவே எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு, பிஸியாக இருந்தால் கொட்டாவி விடுவதை தவிர்க்கலாம்.

அளவுக்கு அதிகமான உடல் சோர்வும் கொட்டாவிக்கான காரணங்களுள் ஒன்றாகும். அதனை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எப்படியென்றால் தண்ணீர் குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, அதனால் கொட்டாவி வருவது தடுக்கப்படும்.

ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருந்தாலும் கொட்டாவி வரும். எனவே இதனை நிறுத்த, அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடவேண்டும். அதிலும் மூச்சை உள்ளிழுக்கும் போது, சிறிது நேரம் தாக்குபிடித்து, அதன் பின் வெளிவிடுங்கள். இப்படி விடுவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் சீரான முறையில் செல்லும்.

அளவுக்கு அதிகமான வேலைப்பளு மற்றும் குறைவான தூக்கம் இருந்தாலும், கொட்டாவி அதிகம் வரும். ஏனெனில் இந்த நிலையில் தான் மன அழுத்தம் அதிகமாகும். எனவே இவற்றை தவிர்க்க, போதிய நேரத்தில் தூங்கி எழுவதோடு, அவ்வப்போது உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

அருகில் யாராவது கொட்டாவி விட்டால், அது அப்படியே அருகில் இருப்பவர்களையும் தொற்றிக் கொள்ளும். எனவே கொட்டாவி விடுபவரைப் பார்க்கவோ அல்லது அவர்களது அருகில் இருப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு கொட்டாவி அதிகம் வரும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.