ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்? – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விளக்கம்

எனது நண்பர்களை நான் சந்தித்த போது, கடந்த ஓராண்டாக எந்த நாவலையும் படிக்கவில்லை என என்னிடம் தெரிவித்தனர். சமூகம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சமகாலம், உலகியல் என பலவற்றை அவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் படித்தனர். ஆனால் நாவலை மட்டும் படிக்கவில்லை. சிலர், தங்களுக்கு இப்பொழுது படிக்க மனசில்லை என்றும், பெரிய நாவல்களை படிக்க விருப்பம் இல்லை என்றும், நாவல்களை படிப்பதால் என்ன பயன் என்றும் கேட்கின்றனர். சிலர் நாவல்கள் எல்லாம் வெறும் கற்பனைகள் தானே என என்னிடம் கேட்டனர்.

சமூகம், அரசியல் போன்றவற்றை படித்தால் உண்மையும், தெளிவும் உண்டாகிறது. அதில் போதுமான தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எதற்காக நாவலை படிக்க வேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

நூற்றாண்டு பயணம்:

இளைஞர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் நாவல் படிக்கின்றனர். கவிதை, கட்டுரை, சிறுகதை, இலக்கியம் படிக்கப்படும் அளவிற்கு நாவல்களும் ஒருவரால் படிக்கப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. தமிழில் ஒரு நாவல் 10,000 பிரதிகளை விற்றாலே அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

நாவலில் இருந்து விலகும் போது ஒரு இலக்கிய வகைமையில் இருந்து விலகுகிறோம் என்பதைக் காட்டுகிறது. அனுபவத்தில் இருந்தும், அதனைப் பெறுவதில் இருந்தும், அனுபவத்தைப் பகிர்வதில் இருந்தும் விலகிச் செல்கிறோம்.

உண்மையில் ஒருவர் புத்தகத்தைப் படிக்கும் போது, அவர் தன்னை தானே தெரிந்து கொள்வதோடு, தன் அறிவு, அறியாமை, மொழி, இனம், கடந்த காலம், வரலாற்றை அறிந்து கொள்கிறான். ஆழ்ந்து படிக்கும் போது உலகை மட்டுமில்லாமல், தன்னையும் அறிந்து கொள்கிறார்கள்.

தங்களிடம் என்ன மாற்றம் தேவை என்பதை உணர தொடங்குவார்கள். சிந்தனை மற்றும் செயலில் சிறிது சிறிதாக மாற்றங்கள் வெளிப்படும். மேலும், பேச்சிலும், செயலிலும் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா, சரியாக தான் ஒரு செயலை செய்கிறீர்களா என்பதை புத்தகம் தான் அடையாளம் காட்டுகிறது.

கால இயந்திரத்தால் நம்மை எந்த நூற்றாண்டுக்கும் அழைத்து செல்ல முடியாது. ஆனால் கால இயந்திரம் இல்லாமலேயே பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் சென்று, அங்கு இருக்கும் மனிதர்களை, வாழ்க்கையை, புத்தகம் வழியாக அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நாவலை படிக்கும் போது, அதில் உள்ள கதாபாத்திரம் அறிந்திராத பல உறவுகளை நமக்கு அறிமுகப்படுத்தி, அறிந்து கொள்ள உதவுகிறது. மனிதர்கள் அடைந்த துயரத்தையும், அதில் இருந்து அவர்கள் மீண்டு வந்த கதையையும் நாவல்களும், இலக்கியங்களும் தான் கூறுகின்றன.

நாவல் என்பது ஒரு ஐரோப்பிய கதை வடிவம். அங்கு தான் நாவலின் இலக்கிய வடிவம் உருவானது. ஆரம்பத்தில் வம்பு மற்றும் வதந்திகளுக்காக எழுதப்பட்டது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் நாவல் என்ற இலக்கிய வடிவம் உலகம் முழுவதும் புகழ் பெறத் தொடங்கியது.

ஏன் இந்த இடைவெளி?:

நாவல் படிப்பதில் தற்போது ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த தலைமுறைக்கு நாவல்களை எதற்காக படிக்க வேண்டும் என்று நாம் கற்றுத் தரவில்லை.

நாவலைப் படிக்க கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டாலும், பொதுவெளியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொதுவெளியில் சில நாவல் மற்றும் படைப்பாளிகள் மட்டுமே தெரிகின்றனர். அதிலும், அவற்றின் மதிப்பீடுகள் வழியாகவே அவை படிக்கப்பட்டன.

என்னுடைய காலகட்டத்தில் 500, 1000 பக்கம் கொண்ட நாவலை படிக்க அனைவருக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் அதை வாங்க வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க வசதி இருந்தும், 1000 பக்கம் படிக்க முடிவதில்லை. இந்த இடைவெளிதான் நாவலில் இருந்து பொதுவாக நம்மை விலக்கி வைத்திருக்கிறது. அதை புரிந்து கொள்ள தவறி இருக்கிறோம்.

நாவல் கூறும் உண்மை:

உலகின் முதல் நாவலை எழுதியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி. இது கணவனுக்காக காத்திருக்கின்ற ஒரு பெண்ணின் கதையை கூறுவதோடு, காத்திருக்குப் பின்பு இருக்கும் தனிமையை, துயரத்தை, பிரிவை கூறும் கதை.

நாவலை ஒவ்வொரு நாட்டினரும் அவர்களின் சமூகத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டார்கள். நாவல் என்பது வெறும் கற்பனை மட்டுமில்லை. அவை ஒரு உண்மையை தன்னுள் கொண்டுள்ளது. அனைவரும் அறிந்த ஆனால் வெளியில் சொல்ல முடியாத உண்மையை கூறுகிறது. சமூகம் யாரை ஒடுக்குகிறது, எதற்காக ஒடுக்குகிறது, வரலாறு எதையெல்லாம் மறைத்து வைக்கிறது, ஏன் வரலாறு எப்போதும் மன்னர்களுக்கு மட்டும் சொந்தமானது, யாரெல்லாம் இருட்டில் வாழ்கிறார்கள், ஏன் அவர்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை, இந்த சமூகத்தில் எப்படி குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள் போன்ற உண்மைகளை நாவல் வெளிப்படுத்துகிறது.

எதையெல்லாம் இந்த உலகம் நம் கண்ணில் காட்டவில்லையோ, அதைப் படைப்பாளிகள் காட்டத் தொடங்குகிறார்கள். சமூகத்தில் என்ன குறைபாடு இருக்கிறது, எதனால் சமூகம் வளர்ச்சி பெறவில்லை, எதை கொண்டாடுகிறோம், எதை மறுக்கிறோம் என்ற அனைத்தையும் பற்றிக் கூறுகிறது. எல்லா நாவலும் யதார்த்தமான வாழ்க்கையை போன்று இன்னொரு வாழ்க்கையை சொல்லுகிறது.

அனுபவ ஊற்று:

வாழ்க்கையின் அனைத்து தருணங்களையும் தொட்டு, அதன் ரகசியத்தையும், வியப்பையும், சந்தோஷத்தையும் நாவல் காட்டுகிறது. மேலும் அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் நம்மிடையே நேரடி தொடர்பில்லாதவர்கள். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் மனதில் தங்கி விடுகிறார்கள். வாழ்க்கைக்கான ஆறுதலையும், அர்த்தத்தையும் நமக்கு கூறுகிறது.

ஒரு நாவலை வாசிப்பதன் வழியாக வாழ்க்கையின் அனுபவங்களை மீட்டு எடுக்கலாம். அறிவை திரட்டிக் கொள்வதற்கு ஏராளமான வழிகள் இந்த உலகில் இருக்கிறது. ஆனால் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள ஆட்கள் இல்லை. அனுபவம் மனதின் அச்சத்தை நீக்குவதோடு, அச்சமில்லாமலும், சுதந்திரமாக இருப்பதையும், மகிழ்ச்சியான பாதையில் செல்ல விரும்புவதையும் அனுபவமே கற்றுத் தருகிறது. பல நாவல்களை படிக்கப் படிக்க பல்வேறு வகையான அனுபவத்தை ஒருவர் பெற முடியும்.