செஸ் போட்டிக்காக ஹீலியம் பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு 

44வது செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு ஞாயிற்று கிழமையன்று கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை அருகில் ஹீலியம் பலூனை  மாவட்ட ஆட்சியர் சமீரன் பறக்க விட்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது போன்று கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை அருகில்  ஹீலியம் பலூனை  மாவட்ட ஆட்சியர்  சமீரன் பறக்க விட்டு, பொதுமக்களுக்காக கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.