கோவையில் கோலாகலமாக துவங்கிய செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இந்தியாவில் முதல் முறையாக, குறிப்பாக சென்னை மாபல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

 

இதனையொட்டி தமிழக அரசு சார்பாக பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா நடைபெற்றது.

முன்னதாக 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி கோவை கொண்டுவரப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் துவங்கி அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைந்தது.

 

கொடிசியாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் வெற்றி செல்வன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் துறை உயர் அதிகாரிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிவிரைவு சதுரங்க போட்டியை கோவையைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் தொடங்கி வைத்தார். இதில் 10 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

பின்னர், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டது.

நிகழ்வில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் ஒலிம்பியாட் மாதிரி ஜோதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒலிம்பியாட் ஜோதியை செஸ் கிராண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் அமைச்சர்களிடம் வழங்கினார். இந்தியாவின் முதல் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் நிர்மலா இதனை அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி அடுத்ததாக மதுரை மாவட்டம் செல்ல உள்ளது.