அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க வீடு வீடாக சென்று ஆய்வு

கோவை மாவட்டத்தில் 1697 அங்கான்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியில் 615, பேரூராட்சிகளில் 325, நகராட்சிகளில் 103, ஊரக பகுதியில் 757 மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 2 முதல் 5 வயது வரையுள்ள 1,79,322 குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.

இங்கு 3ஆண்டிற்கு கீழ் 91,784 குழந்தைகளும், 3 முதல் 5 வயது வரை 66,639 குழந்தைகளும் கல்வி கற்கின்றனர். ஆனால், மாநகர் மற்றும் புறநகரில்  அங்கன்வாடிகளுக்கு குழந்தைகள் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த சில ஆண்டிற்கு முன் ஒரு அங்கன்வாடி மையத்தில் சராசரியாக குழந்தைகளின் வருகை 50 ஆக இருந்தது. இப்போது சராசரியாக 20 குழந்தைகள் கூட வருவதில்லை. சில அங்கன்வாடி மையங்களில் ஒரிரு குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையும் இருக்கிறது.

இதே நிலை நீடித்தால் அங்கன்வாடிகள் பெயரளவிற்கு கூட செயல்படாமல் போய்விடும். இதை தடுக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் வீடு,வீடாக ஆய்வு செய்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பெற்றோரிடம் பேசி அழைத்து வந்து அங்கன்வாடிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் குழந்தைகளை கூடுதலாக அங்கன் வாடிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அங்கன்வாடிகள் செயல்படுகிறது.

இது குறித்து ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது, மாவட்ட அளவில் அங்கன்வாடிகள், நர்சரி பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது. நல்ல பாடத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்களின் வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், அங்கன்வாடிகளின் தினசரி நடவடிக்கை, பாடம், பயிற்சி, உணவு குறித்த விவரங்கள், குழந்தைகளின் செயல்பாடுகள் காண்பிக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் குழந்தை நேய கழிவறை, மின் விசிறி வசதிகள் இருக்கிறது. சில இடங்களில் தனியார் நிதி உதவி மூலமாக டி.வி வாங்கி வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செயல் வழி கற்றல், விளையாட்டு மூலமாக கல்வி கற்பித்து வருகிறோம். இதில் படிக்கும் குழந்தைகள் நல்ல செயல் திறனில் இருக்கிறார்கள். குழந்தைகளின் உடல் எடை நல்ல முறையில் கண்காணிக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகளில் 3 வயது வரையுள்ள 89,989 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள். 3 முதல் 5 வயது வரையில் 65,115 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள். 98 குழந்தைகள் மட்டுமே உடல் எடை குறைவாக இருப்பதும், 95 குழந்தைகள் அதிக உடல் எடையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. அங்கன்வாடியில் சில கட்டிடங்கள் வாடகையில் இயங்கி வருகின்றன. விரைவில் அரசு கட்டிடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம்.

45 அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்பட்டது. தினமும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை சுண்டல் வகைகளும், வெள்ளிக்கிழமை கிழங்கு வகையும் வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது என்று கூறினார்.