இவ்வுலகில் பாம்புகளும் வாழட்டுமே!

பாம்புகளை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாம்புகள் ஊர்வன வகையை சேர்ந்த பிராணிகள் ஆகும். நமது சுற்றுச்சூழல் வளத்தை மேம்படுத்த பாம்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வுலகில் மொத்தம் 3000 வகையான பாம்பினங்கள் உள்ளது . அதில் இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் வாழ்ந்து வருகின்றதன. இதில் சுமார் 50 வகையான பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை உடையது.

ஆசியாவிலேயே  அறிதாக காணப்படக் கூடிய கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பாம்பு இனம் ராஜநாகம். இவ்வகை பாம்புகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வசித்து வருகின்றன. இந்தியாவில் பெரும் நச்சுத்தன்மையை உடைய பாம்புகள் கண்ணாடி விரியன் , நல்ல பாம்பு, கட்டுவிரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும். இது தவிர சாரை பாம்பு, மலை பாம்பு , தண்ணீர் பாம்பு மற்றும் ஓநாய் பாம்பு ஆகியவை விஷதன்மை அல்லாத   பாம்பு இனங்கள் ஆகும். அதுமட்டுமின்றி  பச்சை பாம்பு மற்றும் பூனை பாம்புகள் போன்றவை குறைந்த நஞ்சுடைய பாம்புகளாகும்.

மக்கள் மத்தியில்  பாம்புகள் பற்றிய தவறான எண்ணங்களையும், தவறான தகவல்களையும் நீக்க வேண்டும். கிராமம் மற்றும் நகரப்புறங்களில் அதிகம் பாம்புகள் வசித்து வருவதால் பொதுமக்கள் விஷமுள்ள மற்றும் விஷமில்லாத பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.பாம்புகள் கூட இவ்வுலகில் வாழ  தகுதிபெற்ற உயிரினம்.  பாம்பு பழிவாங்கும், பாம்பு மகுடிக்கு மயங்கும் போன்ற மூடநம்பிக்கைகளை மக்கள் கைவிடவேண்டும்.

பாம்புக்கடி என்பது ஒரு விபத்தாகும். வருடத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாம்புக்கடியினால் இறக்கின்றனர். அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக்களை இழக்கின்றனர். இதற்க்கு முக்கியமான காரணம் பாம்புகளை பற்றிய தெளிவான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவில்லை.

பாம்புகள் பொதுவாக மனிதர்களை கடிப்பதில்லை. மனிதனின் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பாம்புகள் மனிதனை தாக்குவதில்லை. அது மனிதனின் காலடி சத்தம் கேட்டால் விலக நினைக்கும். நாம் பாம்பை மிதிக்கும் போதோ அல்லது  தெரியாமல் அடிக்கும் போதோ மட்டுமே பாம்பு நம்மை தாக்க முயல்கிறது.

இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. பாம்புகளை கண்டால் அதை அடிக்கவோ, கொள்ளவோ முற்படுவது தவறான செயலாகும். பாம்பினை கண்டதும் வனத்துறையினரிடமோ அல்லது பாம்பு மீட்பவர்களுக்கோ தகவல் அளிக்க  வேண்டும். பாம்புகள் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. எலிகளை  அழிப்பதில் பாம்பு பெரும்பங்கு வகிக்கிறது. எலிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தால் நமக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமின்றி நோயால் பாதிப்படைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இயற்கை சமநிலையை காக்க பாம்புகளையும் காக்க வேண்டும்.

 

Story by : Sowndharya sakthi