கோவையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நீர்வளத்துறை அமைச்சர் கலந்துரையாடல்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கீழ்பாவானி பாசன விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றுது.

இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தடுப்பூசிகளை போட்டுள்ளார். விரைவில் நலமடைந்து வருவார் என தெரிவித்தார்.

கே.பி முனுசாமி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம். சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை பெற்றுள்ளார் ” என பதிலளித்தார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அரங்கத்தின் முன்பாக 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.