தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 கடலோர மாவட்டங்களின் 43,174 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பள தொழிலில் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபடுகின்றனர். தற்போது, தென்மேற்கு பருவக்காற்றினால், உப்பள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைகளும் கிடைத்ததுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தான் உப்பு உற்பத்தி தொடங்கும். ஆனால், இந்த முறை மட்டும் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் தாமதமாகவே உப்பு உற்பத்தி தொடங்கியது. அதனால், உப்பின் விலை கிடு கிடுவென ஏறியது.

உப்பளத்தினை சரி செய்த பின்னர் ஆழ்துளைக் கிணறு மூலம் பெறப்படும் உப்புத் தண்ணீர், தெப்பம் எனப்படும் பெரிய நீர்த் தேக்கத்தில் சேமிக்கப்பட்டு அதன் உவர்ப்பு தன்மை அதிகப்படுத்தப்படுகிறது. நீரின் உவர்ப்பு தன்மையானது அளவு கோல் எனும் கருவி மூலம் டிகிரி கணக்கில் அளவிடப்படுகிறது.

பொதுவாக ஆழ்துளைக் கிணற்றில் கிடைக்கும் நீரில் உப்பின் அடர்த்தி 10 முதல் 15 டிகிரி வரை இருக்கும். உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு 24 முதல் 27 டிகிரி அடர்த்தி கொண்ட நீரில் விளைகிறது. தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் உப்பானது 28 முதல் 30 டிகிரி அடர்த்தி கொண்ட நீரினை அதிக நாட்கள் தேக்கி வைப்பதன் மூலம் கிடைக்கிறது.

இந்நிலையில், உப்பு உற்பத்திக்கு ஏற்றவாறு தென்மேற்கு பருவக் காற்று வீசுவதால், தற்பொழுது முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் உப்பை தேக்கி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உப்பள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைத்து வருகிறது. மேலும் உப்பின் விலையும் டன்னுக்கு 500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.