வாட்ஸ் ஆப் குழு மூலம் போலி தகவல்களை தடுக்க நடவடிக்கை 

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, போலியான செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, இந்தியாவில் தனிக் குழு அமைக்கப்படும்’ என, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.சமூக ஊடகமான வாட்ஸ் ஆப் மூலம், போலியான செய்திகள் பரப்பப்படுவதால், அப்பாவிகள் பலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இந்நிலையில், ‘இதை கட்டுப்படுத்த, வாட்ஸ் ஆப் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மத்திய அரசு எச்சரித்தது.இதையடுத்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மேட் ஐடிமா, இந்தியா வந்தார். இங்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப்பின் இந்தியா நிர்வாகத்தை கவனிக்க, தனியாக தலைவரையும், இந்திய விதிமுறைகளை நிர்வகிக்க தனி தலைவரையும் நியமிக்க, வாட்ஸ் ஆப் நிர்வாகம் முடிவ செய்துள்ளது.மேலும், போலியான தகவல்களை கட்டுப்படுத்த, இவர்கள் தலைமையில், இந்தியாவில் குழு அமைக்கவும், வாட்ஸ் ஆப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.