நன்னெறி வேளாண் முறைகள்

நம் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டாலும், மண்வளம் கெடாமலும் பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டும் பயன்படுத்தி சுகாதாரமான மற்றும் உடலுக்கு பாதுகாப்பான உணவு பொருட்களை உற்பத்தி செய்வதே நன்னெறி வேளாண் முறைகளாகும். உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு நிறுவனம் (FAO) வேளாண் உணவு பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் (APEDA) போன்றவற்றை நுகர்வோருக்கு நல்ல பாதுகாப்பான, நஞ்சு எஞ்சியிராத உணவுப்பொருட்களை நுகர்வோர் நன்முறையில் வழங்கும் நோக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது வர்த்தக ரீதியாக வளர்ந்துவரும் போட்டி மற்றும் தனி அதிகாரம் காரணமாக பல புதிய தரக்குறியீடுகளை அறிமுகப்படுத்துவது இன்றியமையாததாகும்.

 நன்னெறி வேளாண்மையின் பயன்கள்:

விவசாயிகள் நன்னெறி வேளாண் உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரிய பல பயன்களை பெறமுடியும்.

  • சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  • மண்வளம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
  • நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்க வழி செய்கிறது.
  • தரமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிதும் துணை புரிகிறது.
  • விவசாயப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
  • பண்ணையிலிருந்து பெறப்படும் விளைபொருட்களின் அளவு மற்றும் விற்பனை தரம் அதிகரிக்கிறது.
  • விளை பொருட்கள் பதப்படுத்தப்பட்டு மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்ய வழி வகிக்கிறது.

தற்பொழுது நன்னெறி வேளாண்மையில் பல்வேறுபட்ட தரக்காட்டுப்பாடுகள், உணவுதொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களில், இணைந்து வேளாண் பொருட்கள் உற்பத்தி முறைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது.

நன்னெறி வேளாண் முறைகளின் அடிப்படை கோட்பாடுகள்

தூய்மையான மண்வளம் : உரம் மற்றும் கால்நடை மூலம் மண்ணில் நுண்ணுயிர் வராமல் கட்டுப்படுத்துதல் மற்றும் நன்கு மக்கிய உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் தூய்மையான மண்வளம் பாதுகாக்க முடியும்.

தூய்மையான தண்ணீர்: நிலத்தடி நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை நீர் வழிந்தோட்டம் அல்லது கால்நடைகள் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். பாசன நீரை மனித நோய்க் கிருமிகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். நீர் பரிசோதனை மூலம் நிலத்தடி மற்றும் மேல்மட்ட நீரை குறிப்பிட்ட காலங்களில் அடிக்கடி பரிசோதனை செய்யவேண்டும்.

தூய்மையான கரங்கள்: பண்ணை தொழிலாளர்கள் சுத்தமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

தூய்மையான சூழ்நிலை : பண்ணை கருவிகள், சேமிப்பு கிடங்கு மற்றும் வாகனங்களை நன்றாக கழுவி தூய்மையாக பயன்படுத்துதல். நன்னெறி வேளாண் முறையில் முக்கியமாக பண்ணைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பண்ணையின் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் பாதுகாக்க முடியும்.