மண்ணை காக்க 100 நாள் சரித்திரப் பயணம்

உலகளவில் அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மண்ணின் வளத்தை இனிவரும் காலங்களிலாவது பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ‘மண் காப்போம்’ என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

இதற்காக உலக நாடு முழுவதும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மேற்கொண்டுள்ளார். மார்ச் 21 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தப் பயணத்தை அவர் துவங்கினார். அங்கிருந்து ஏப்ரல் 22 ஆ-ம் தேதி வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அவர் பயணித்தார்.

ஏப்ரல் 23 முதல் மே 25 வரை துருக்கி, அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 7 நாடுகளுக்கு பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது பயணத்தை முடித்த அவர், மே 29 அன்று இந்தியா திரும்பினார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து, நிறைவாக ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ பயணிக்கும் அவர் தமிழ்நாட்டில் கோவையில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கவனம் ஈர்த்து வரும் சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு பல்வேறு நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருவதோடு, சர்வதேச அமைப்புகள், அரசியல், வணிகம், சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்த தரப்பினரிடம் இருந்தும், கலைஞர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. பல நாடுகள் தங்கள் மண்வளத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

சத்குருவின் இந்த விழிப்புணர்வு பயணம், பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப் படுத்தி உள்ளது என புது டெல்லியில் உள்ள       விஞ்ஞான் பவனில் நடைபெற்ற மண் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மேலும் அவர், சத்குரு மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மிகவும் கடினமானது என்றும், இந்தப் பயணத்தின் மூலம் உலகளவில் மண்ணின் மீதான அன்பு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது போன்ற அனைத்து நிலைகளிலும் மண் வளத்தை மேம்படுத்துவது என்பது அவசியம். மண் அழிவதை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் நீண்ட கால முன்னெடுப்பில் அனைத்து குடிமக்களும் பங்கெடுக்க வேண்டும். மக்கள் குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் அரசாங்கங்கள் இதுபோன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த முன்வரும் எனப் பேசினார்.

மண்ணானது அழிவை நோக்கி நகரும் போது, நம்மில் பெரும்பாலோர் அழிந்துவிடுவோம். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால், மனித நாகரீகம் அழிந்துவிடும். மேலும், சில நாட்களில் நமது மனிதநேயமே மரத்துப் போய்விடும் என நாசிக்கில் நடைபெற்ற மண் காப்போம் நிகழ்வில் சத்குரு பேசினார்.

15 முதல் 18 அங்குலம் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும், மக்கள் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். மனித கால்தடமே படாத ஒரு அங்குல மண்ணை உருவாக்க 600 முதல் 800 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போதைய மனித நடவடிக்கையினால் ஒரு அங்குல மேல் மண்ணை உருவாக்க வேண்டுமானால், அதற்கு 13,000 ஆண்டுகள் ஆகும் என்று சத்குரு விளக்குகிறார்.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க முடியும். இதில் காலதாமதம் செய்தோமானால் 25 முதல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணின் மீள் உருவாக்கம் சாத்தியம் இல்லாததாகி விடும். எனவே மண்ணைப் புதுப்பிக்கத் தேவையான கொள்கைகள் உருவாக்கப்படும் வரை மக்கள் தங்கள் குரலை உயர்த்தி மண்வளத்தை காக்க வேண்டும் என்கிறார் சத்குரு.

மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். இதற்கு விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண்ணின் அழிவிற்கு காரணமாக அமைந்து விட்டோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் எனக் கூறுகிறார் சத்குரு.

உலகின் 10 சதவீத நிலப்பரப்பு கடந்த 25 வருடங்களில் மட்டுமே பாலைவனமாக மாறியுள்ளது எனக் கூறும் சத்குரு, மண் அழிவு வேகமாக நிகழ்ந்து வருவதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார். மரங்களின் இலை, தளைகளும் கால்நடைகளின் கழிவுகளால் மட்டுமே மண்ணை வளமாக வைத்து கொள்ளமுடியும். 60 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கும் நம் நாட்டில் போதிய மரம் மற்றும் கால்நடை இருப்பது முக்கியம். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் கால்நடைகள் அனைத்தும் இல்லாமல் போனால், நாமும் காணாமல் போவோம் என ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

2050 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள 90 சதவீதம் மண், அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சம் மற்றும் பட்டினிச் சாவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்குருவின் இந்த மண் காப்போம் முயற்சி உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.