தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமாரி, தஞ்சாவூர், தருமபுரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில பகுதிகளில்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமாரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்  18ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை , திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்று கிழமை  ஜூன் 19ம் தேதி  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், 20, 21ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான  முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.