படித்த முட்டாள்களில் நம்பர் 1 முட்டாள்.அண்ணாமலை – செந்தில் பாலாஜியின் பதிலடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதியில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், “ஆட்சி மாறியதும் நீங்கள் முதலில் கைது செய்யப்படுவீர்கள் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு செந்தில் பாலாஜி  பதிலடியாக, சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது. அதேபோல, அண்ணாமலையின்  கனவு ஒருபோதும் பலிக்காது.

நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் அவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கரூரில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என, நீங்கள் கேட்க வேண்டும். இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்?

அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்த போது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா? இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார்? நேர்மையான அதிகாரி போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கினார். மக்களுக்கு சேவை செய்யவா வேலையை விட்டார்..?

143 டாலருக்கு நாங்கள் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளோம். இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது? நிலக்கரி தட்டுப்பாடு இருந்த போதும்  கூட இங்கு தடை இல்லாத மின்சாரம் கொடுத்தோம். பாஜக ஆளும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்.

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது என்னை தூக்கிப் போட்டு பல்லை உடைப்பேன் என்று அவர் கூறினார். இப்படித் தான் அவர் மக்கள் முன்பு பேசுவார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் இப்படியா பேசுவார்கள்?

விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார். வெறும் நான்கு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு பிரதான எதிர்க்கட்சி பாஜக என, சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால், மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பதிவு போட்டவர் அவர். படித்த முட்டாள்களில் அவர் நம்பர் 1 முட்டாள்  என்று, கூறினார்.